கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?
பதில்:
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் சிறப்பை மிக எளிமையாக, சுருக்கமாக சொல்லமுடியுமே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆரம்ப காலம் முதலாகவே, எளியமுறை உடற்பயிற்சியில் அவ்வப்பொழுது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வந்தார். ஆண்பாலருக்கு மட்டுமல்லாமல், பெண்பாலருக்கும் உண்டான பொருத்தங்கள், விளைவுகள், சங்கடங்கள், பலன்கள் இவற்றை ஆராய்ந்து திருத்தங்களும் செய்து வந்தார். அதை மறுபயிற்சியில் திருத்தங்களோடு சொல்லியும் வந்தார். அறிவும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ ஆலோசகர்களையும் கலந்தாலோசித்தும், அவர்கள் சொன்ன கருத்துக்களையும் ஏற்று, திருத்தம் அமைத்துக் கொண்டபிறகுதான், முழுமையான இப்போது இருக்கும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது.
இந்தபயிற்சியில், அதை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷியே எளிய விளக்கங்களை மட்டுமே தந்து நிறுத்திக்கொண்டார். கேட்பவர்களையும், பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களையும், பயிற்சி கற்றுக்கொண்டவர்களையும், கற்றுக்கொண்டு இருப்பவர்களையும் குழப்பவில்லை. ஆனால் இன்று அதற்கு மாறான போக்கு வந்துவிட்டது, விபரம், நுணுக்கம், அற்புதம், அது இது என்று பல்வேறு வகையான, பல்லாயிரக்கணக்கான தகவல்கள் ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில்’ கிடைக்கிறது. காலத்தின் மாற்றம் என்பதில் ஐயமில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
இதனால்தான், உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மிக எளிமையாக, சுருக்கமாக இங்கே உண்மைகளை தருகிறேன். உலகில் இப்போதும் நாம் செய்துவருகின்ற எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் நம்முடைய உடல் இயக்கத்தை சரி செய்கிறது. இதில் வயதுக்கு ஏற்றமாதிரியான பயிற்சிகளும் உண்டுதான். சில உடற்பயிற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் எலும்புகள், தசைகள் இயக்கங்களை மறு சீரமைப்பும் செய்கிறது. வலி ஏற்படுத்தினாலும், நாளைடைவில் தானாக சரி செய்யும். உடலுக்கு போதுமான இரத்த ஓட்டத்தையும் காற்று சுழற்சியையும் தடையற்று இயக்குகிறது, உடல்வெப்பம் இயல்பாகிறது. என்றாலும் கூட, சில அசைவுகள் முரண்பாடானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இத்தகைய பயிற்சிகளில், கவனம் செலுத்தி வந்த குருமகான் வேதாத்திரி மகரிஷி, அதை முழுவதுமாக சீராக்க நினைத்து ஆராய்ந்தார். ஓவ்வொரு நாட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம். அவர்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் உடல், மனம் தொடர்பான வேலைகள், பயிற்சிகளை கேட்டுத்தெரிந்து கொண்டார். அதை பயிற்சியாக இணைத்தும்கொண்டார். அதனால், வேறெந்த உடற்பயிற்சிகளுக்கும் மேலாக வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உடலுறுப்புக்களின் இயக்கத்தை சீரமைத்து வலு ஊட்டுகிறது.
உடலில் ஒவ்வொரு உறுப்புக்களிலும், சதை, தசை, எலும்பு ஆகியவற்றின் இயக்கங்களிலும், அவற்றின் மூலக்கூறு, செல் அமைப்புகளிலும் நாம் செய்கின்ற செயல்கள், இயக்குகின்ற இயக்கங்கள் பதிவுகளாகிவிடுகின்றன. தேவைக்கேற்றபடி தானாகவோ, விரும்பும் பொழுதோ, சூழ்நிலையாகவோ அவை மறுபடி செயலாக மலர்கின்றன. அப்படியாக, இதுவரை நாம் செய்துவந்த செயல்களின் வழி
பதிந்த தேவையற்ற முரண்பாடான உடலியக்க பதிவுகள் சீராக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமாக, இயற்கையோடு ஒன்றிணைந்து உடல், மனம், உயிர் ஒத்துழைப்பாக இயங்க வழி தருகிறது!
வாழ்க வளமுடன்
-