Why need to search good one in life always? Sometimes it is not available also! | CJ

Why need to search good one in life always? Sometimes it is not available also!

Why need to search good one in life always? Sometimes it is not available also!


வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


பதில்:

உங்களுக்கு ஒர் உண்மை தெரியுமா? இந்த வாழ்க்கை நாம் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே நம் பெற்றோரும், முன்னோர்களும், தலைமுறையினரும் உருவாக்கி, பாதை போட்டுத்தந்த வழியிலே நாம் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை.  இன்று நீங்கள் பயணிக்கும் பாதையில், இன்னும் சிலவழிகளை, உங்கள் பயணத்தின் பொழுது, நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், உருவாக்குகிறீர்கள். அந்தவழியில் பயணிக்க உங்கள் குழந்தைகள், உங்களுக்கு வேண்டியோர் பயணிப்பார்கள். உங்கள் நண்பர்கள்கூட பயணிக்க தயாராவர்கள்.

இப்படியான பாதைகளும், வழித்தடங்களும் எண்ணற்றவை. ஒரு மரத்தின் கிளைகள் போல இல்லாமல், அதன் வேராக எங்கும் படர்ந்து விரிந்து சென்று, ஏதேனும் ஓரிடத்தில் அவை இணைந்து பிண்ணி பிணைந்துகொள்ளவும் செய்யலாம். விடுத்து இன்னொன்றாக பிரிந்தும் விரியலாம். அது அதனதன் தன்மையையை பொறுத்தது.

இந்த பாதைகளை பொறுத்தவரை எது நல்லபாதை? எது கெட்டபாதை? எது அவசியமற்றது? எது தவிர்க்கவேண்டியது? எது பிரச்சனைக்குறியது? எது மிகச்சிறந்தது? என்பதெல்லாம், அந்த வழியில் பயணித்து சிக்கி பாடம் கற்றோர், இந்த சமூகத்திற்கு, உலகுக்கு விபரத்தை தந்திருக்கிறார்கள். அதுதான் அறவழி என்றும் சொல்லுகிறார்கள். மனித வாழ்வின் நோக்கத்தை சிறப்பாக்கும் என்றும் வாழ்க்கையில், நல்ல வழக்க பழக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அறவழியில் பயணிப்போர், மேலும் பல உண்மைகளை அறிந்து, உணர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு தந்து செல்கிறார்கள்.

என்றாலும், குறுமதியார்கள் மக்களை, அவர்களின் மனதை குழப்பி, பாதை தடுமாறச்செய்து, அதில் தனக்கான பொருளையும், புகழையும் பெறத்துடிக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த பாதையில் நின்று, நல்வழியில் செல்லும் மக்களை தடுத்து திசைமாறச் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலோர் சிக்கி திணறுகிறார்கள். இப்படியான பாதையில்தான் நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று கருத இடமிருக்கிறது. அதனால்தான், வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்.

ஒரு வீட்டின் சமையலையில், உணவு சமைப்பதிற்கு தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருளை தேடாமல் எடுத்து பயன்படுத்துபவர் உங்கள் தாயாராகவோ, வாழ்க்கை துணைவராகவோ, நீங்களாகவோ இருக்கலாம். இன்னொருவரை அழைத்து வந்து, ‘அந்த வெள்ளை சக்கரையை எடு’ என்றால் அவர், உப்பை எடுத்துத்தரக்கூடும் அல்லவா? அதற்கு வாய்ப்பில்லை என்றால், எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருப்பார். இன்னொரு உதாரணமாக, வெள்ளை சர்க்கரை மட்டுமே இருக்கிற இடத்தில், உப்பையும், மாவையும், ரவையையும், வெள்ளை சோப்புத்தூளையும், இன்னும் சில ரசாயன உப்புக்களையும் நிரப்பி வைத்தால், அனுபவப்பட்ட நீங்களே கொஞ்சம் குழம்பித்தான் போவீர்கள் அல்லவா? இத்தகைய குழப்பும் வேலையைத்தான் ‘இன்றைய சமூகத்தில்’ சில குறுமதியார்கள், உண்மைக்கு புறம்பாக  செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதை அடையாளம் காணுங்கள், எது உண்மை என்பதை கண்டடைய பழகுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுப்போல, ‘அல்லதை விடுத்தால் நல்லது அங்கேயே இருப்பதை அறியலாம்’.

வாழ்க வளமுடன்

-