Does the occasion and the situation automate? If not, do we create ourselves?
சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?
பதில்:
நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.
மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.
இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.
ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?
எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு, தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.
வாழ்க வளமுடன்
-