Can we live at this present, at this second and live without mind in our life?
நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?
பதில்:
உலகில் மனிதனின் வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையை வாழும் மனிதனுக்கும் உதவும் வகையில் எண்ணற்ர பயிற்சி முறைகள், இப்பொழுது கிடைத்துவருகின்றன. அக்காலத்திலும், மனிதனின் உண்மையறிய, பிறப்பின் நோக்கம் அறிய, இறை என்ற மெய்ப்பொருளின் உண்மையறிய யோகம் என்றும் பயிற்சி முறை சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது. யோகத்திற்கு வரமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத எளிய மனிதர்களுக்கு பக்தி என்ற முறை தோற்றுவிக்கப்பட்டது. நல்லது செய்தால் புண்ணியம், கெட்டதும் தீயதும் செய்தால் பாவம் என்ற அறநெறி வாழ்க்கை முறையும் வழங்கப்பட்டது.
யோகம் என்பது சித்தாந்தம் என்றும், பக்தி வழியில் உருவானதை வேதாந்தம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த சித்தாந்தமும், வேதாந்ததமும் கூட காலத்தால் மாற்றம் பெற்றுவிட்டதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அதில் உள்ள சிரமங்கள், குழப்பங்கள், தடைகள் எல்லாம் நீங்கி எளிமையாகிவிட்டதை நாம் அறிவோம். எனினும் வேதாந்தத்தின் துணை அருகில் செல்வதற்கு மட்டுமே உதவும். சித்தாந்தம் மட்டுமே அந்த உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும்.
இந்த வளர்ச்சியில், நவீன காலத்தில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் என்றும் பலப்பல பயிற்சிமுறைகள் வந்துவிட்டன. இதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும் ஏறக்குறைய ஒன்றுதான் எனினும், சிற்சில வித்தியாசங்கள் இருக்கலாம். நிகழ்காலம் என்பது, இன்று, இப்பொழுது, இந்த நொடி என்பதாக மட்டுமே சொல்லமுடியும். இதை சொல்லி முடிக்கும் பொழுதே அது இல்லாமல் போய், அடுத்த நொடி வந்து நின்றுவிடும். எனவே நிகழ்காலம் என்பதும், இக்கணம் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ள, ஆழ்ந்த பயிற்சி வேண்டும். கடந்து போனதையும், வரப்போவதையும் நினைக்காத மனம் அமையவேண்டும். அத்தகைய மனம் அமைவதற்கு பயிற்சிகள் வேண்டும்.
அத்தகைய பயிற்சிகள், யோகத்தில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நவீன கால பயிற்சிகளில் அது உண்டா? நிச்சயமாக உதவுமா? என்று சொல்லுவதற்கில்லை. மனம் மிக வலிமையானது. மிக நன்றாக நடித்து ஏமாற்றிவிடக் கூடியது. நம்மைவிடவும் திறமைசாலி. நாம் சொல்லிக்கொடுக்காமல் எல்லாவற்றையும், கற்று, பதிந்து, எடுத்துக்காட்டிவிடக் கூடியது. அப்படியான மனதை, வெறுமனே பயிற்சியால், நிகழ்காலத்தில் இரு, இக்கணத்தில் இரு என்று பழக்கிவிட முடியாது. ஒருவேளை அப்படி பயிற்சி கொடுத்தால், அதை, மனதை பழக்கிட நம் வாழ்நாள் போதாது என்று கருதிவிட இடமிருக்கிறது.
மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வது என்பது கட்டுக்கதை என்றுதான் சொல்லமுடியும். மனிதன் என்றாலே மனம்+இதன்=மனிதன் என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். இதில் மனதை தள்ளிவைத்தால், மனமற்ற நிலையில், மனிதன் இருப்பானா? அவனிடம் இதம் தான் இருக்குமா? மனமற்ற நிலையில் எப்படி அவன் வாழமுடியும்? செயல்பட முடியும்? ஒருவேளை அப்படி வாழ்வதாக தன்னையே ஏமாற்றிக்கொள்வானா? எனினும் இதற்கெல்லாம் பயிற்சி இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அந்த பயிற்சியால் மனதை தள்ளிவைத்தும், மனமற்ற நிலையிலும் வாழ முடியும் என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’. மனதை அறிய நினைக்காமல் தள்ளிவைப்பதும், மனமற்ற நிலையில் வாழ்வதும் எப்படி சாத்தியமாகும்?
எப்படியோ, இந்த பயிற்சிகளால் உங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளாமல் இருந்தால் சரிதான். ஏதோ ஒருவழியில், உங்கள் பிறப்பின் நோக்கமான ‘நான் யார்?’ என்ற உண்மையறிதலை நோக்கி பயணம் செய்தால் நல்லதுதான். எந்த வகையிலும் நீங்கள் சிறக்க, நீங்களே முடிவெடுங்கள். நான் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-