Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?
யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?
பதில்:
நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?
அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?
வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?
தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.
எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-