Why I have a problems even nothing do not mistake and helping to others in life?
என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?
பதில்:
உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?
எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?
கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள். அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!
வாழ்க வளமுடன்
-