கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?
பதில்:
இதுபோலவே நிறைய அன்பர்கள் என்னிடம் சொல்லியதுண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன். வாருங்கள் அலசுவோம். முதலில், தியானம் என்பது குறித்த உண்மையை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளகூடாது. அதாவது நீங்களாகவே ஒரு நூலை வாசித்து, யாராவது குருவின் வாழ்க்கை வரலாறை படித்து அதுபோன்ற தியானம் அனுபவம் பெறலாம் என்று நினைத்து, தியானம் இயற்றக்கூடாது. முறையாக குருவிடம் தீட்சை வழியாக கற்றுக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழியாகும்.
உங்கள் குரு உங்களுக்கு எவ்வகையில் உபதேசமும், தியான முறையும் சொல்லித்தருகிறாரோ, அதன் வழியேதான் தியானம் செய்யவேண்டும். எந்தவகையிலும் நீங்களாகவே அதில் மாற்றம் கொண்டுவரக்கூடாது. அதுபோலவே ஒரு தியானம் செய்வதற்கான நேரம் முக்கியமானது. அதை நீடிக்கவும், குறைக்கவும் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் தானாகவே தியானத்தில் ஆழ்ந்து நீடிக்குமானால் அதில் எந்த தவறும் இல்லை. அப்படி ஆழ்ந்து நீடித்தல், பல ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தில்தான் கிடைக்கும் என்பதால் அந்த பயமும் இப்போதில்லை.
தியானம் கற்றுக்கொள்ளும் அன்பர்கள், தங்களின் வயது, அனுபவம், வாழ்க்கை முறை, ஏற்கனவே பக்தியில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, முற்றிலும் புதிய அனுபவம் என்ற வகையில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இருக்கும் என்பதால். ஒரு தியானம் எல்லோருக்குமே ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு வகுப்பில் உங்களோடு உள்ள அன்பர்களின் தியான அனுபங்களையும், ஏற்கனவே அனுபவம் மிக்க அன்பர்களின் தியான அனுபவங்களையும், உங்களுடைய தியான அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது நல்லதல்ல.
தியானத்தில் மனம் நிகழ்த்தும் மாயாஜாலம் யாராலும் புரிந்துகொள்ளவும் முடியாது. நீங்கள் உங்கள் வழியிலே செய்யும் தியானத்தில் என்ன நிகழ்கிறதோ? அதில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, குருவோடும், ஆசிரியர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களின் சக அன்பர்களோடு பகிரலாம். ஆனால் ஒப்பீடு தேவையில்லை. முக்கியமாக, மற்ற அன்பர்களின் தியான அனுபவங்களை எல்லாம் கேட்டு, அதை உங்களுடைய மனதில் ஏற்றிக்கொண்டு, எனக்கும் அதுபோல நிகழுமா? என்ற கேள்வியோடும், எனக்கும் அதுபோலவே நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரின் அனுபவம் அவருக்கு. உங்கள் அனுபவம் உங்களுக்கு என்பதுதான் உண்மையானது. இதில் எந்த ஒப்பீடும் உதவாது.
உங்கள் யோகபயணத்தில், நீங்கள் இயற்றுகின்ற தியானத்தில், உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களே மிகச் சிறந்தது என்பது உணர்ந்துகொள்ளுங்கள். அதையே சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள். உங்கள் யோகத்தில் சிறப்பான நிலையை அடையலாம்.
வாழ்க வளமுடன்
-