It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga? | CJ

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-