Can we change the day, time, place for the yoga practice? Is it Okay?
தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?
பதில்:
சாதாரணமாக கண்கள்மூடி தவம், தியானம் செய்வதற்கும், குருவிடம் தீட்சை பெற்று, யோகவழி தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலவே நாம் இயற்றும் வேதாத்திரிய தவங்களுமாகும். பொதுவாகவே யோகவழி தவங்களுக்கு, உங்களுக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்வது மிக நல்லது. அப்போதுதான் மனம் அமைதியில் இருக்கும். தவமும் சிறக்கும்.
இடம் என்பதை, நீங்கள் என்றுமே பயன்படுத்தாத, எப்போதாவது பயன்படுத்துகின்ற இடமாக இருக்கக்கூடாது. வழக்கமான வாழ்வில், எப்போதும் நிறைவாக பயன்படுத்தும் அறையாக, இடமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய படுக்கையறையும் பொருத்தமானதே. பலர் வந்து போகின்ற அறையாகவோ, வரவேற்பறையாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தவம் இயற்றுகின்ற நேரம் முழுவதும் எந்த தொந்தரவும், தடையும் ஏற்படுத்தாத நிலையும் முக்கியம்.
காலம் என்பது, ஒவ்வொரு நாளும், சூரிய உதயத்திற்கு முன்பான காலம் சிறப்பு. கூடுதலாக காலை, நண்பகல், மாலை வைத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேலாக தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நேரம் என்பதை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தவத்திற்கு 15 நிமிடம் போதுமானது. அதை நீடிப்பது உங்கள் விருப்பம். அதை தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நேரம் முழுவது உங்களுக்கு தடையோ, பிரச்சனையோ பிறரால் எழாத தனிமை அவசியமாகும்.
இந்த காலம், நேரம், இடம் இம்மூன்றையும், ஏதேனும் சூழ்நிலை கருதி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக், உங்கள் இல்லத்தில் விருந்தினர் வருகை என்றால், அவர்களை தொந்தரவும் செய்யாமல், ஏதேனும் மற்றோர் இடத்தில் தவம் செய்யலாம். ஆனாலும் உங்களுக்கு பொருந்தாத இடத்தில் தவம் செய்வதை தவிர்க்கலாம். தவம் இயற்றுவதற்காகவே வெளியிடங்களுக்கு, இன்னொருவர் வீட்டிற்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள மனவளக்கலை தவமையத்திற்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ செல்வது மிகச்சிறந்த வழியாகும்.
ஏதேனும் சூழலில், நீங்கள் வெளியூரில் இருந்தால், அங்கே தவம், தியானம் இயற்றுவதை தவிர்க்கலாம். புதிய இடங்கள் எப்படிப்பட்டவை என்ற அனுபவம் நமக்கு இல்லை என்பதால் விட்டுவிடலாம். அதுபோல பொது இடங்களில் தவம், தியானம் இயற்றுவதும் நல்லதல்ல.
ஏன் இப்படியாக மாற்றிக்கொள்ளக்கூடாது? அதற்கு சில காரணங்கள் உண்டு. தினமும் உங்கள் வீட்டில் ஒரே இடத்தில், தவம், தியானம் செய்துவந்தால், அந்த அறை, இல்லம் முழுவதும் நல்ல ஆற்றல்களம் நிறைந்திருக்கும். தவத்திற்கு அமர்ந்த உடனே மனம் லயித்து செய்யவும் முடியும். உங்கள் யோக பயணத்தில் நல்ல வளர்ச்சியை தந்துவிடும் எனலாம். பொதுவாக உங்கள் மனதில் தோன்றும் ‘உள்ளுணர்வுக்கு’ மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு பொருந்தாத இடம், காலம், நேரம் என்பதை தானாகவே உணர்த்திவிடும் என்று சொல்லலாம். அதை கணித்து மாற்றம் செய்து கொள்க.
வாழ்க வளமுடன்
-