Home » yoga » When every living being is happy in his own life, why is there so much suffering for human beings?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?
பதில்:
வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவின் ஆரம்பத்திலும் மக்களின் வாழ்வு நிலை குறித்த தன்னுடைய கவலை தெரிவித்துவிட்டுத்தான், அதற்கான மாற்றுவழியை அறியத்தரும் யோகம் குறித்து பேச ஆரம்பிப்பார். இந்த உலகில் ஓரரறிவு முதல் ஐயறிவு வரையிலான எல்லா ஜீவன்களும் நிறைவாக வாழ்கின்றன. அதனதன் இயல்பில், அந்த வாழ்வில் இன்பம் திளைத்து வாழ்கின்ற என்பதே உண்மை. அவைகளுக்கும் பிறப்பு, வாழ்வு, பசி, தாகம், வலி, துன்பம், நோய், இறப்பு உண்டுதான். எனினும் அவைகள் தன்னளவில் இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று, அளவோடு, முறையாக வாழ்கின்றன.
இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடும்பொழுது, ‘ஒழுக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளாத, இத்தகைய ஜீவன்கள், இயற்கையை மீறிடாமல், இயல்பாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், வாழ்வதற்காகவே, ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மனிதனோ, ஒழுக்கத்தையும், இந்த இயற்கையையும் மீறிட தயங்குவதில்லை’ என்று சொல்லுகிறார்.
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த துன்பங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தால், வேதாத்திரி மகரிஷியின் மேற்கூறிய வார்த்தைகளிலேயே பதில் கிடைத்துவிடும். மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவின் உச்சத்தில், சிந்தனை உயர்வை பெற்றவன். தன்னையும், இந்த பிரபஞ்சத்தையும், மூலமான இறையாற்றலையும் கூட உணரத்தக்கவன். ஆனால் அந்தவகையில் அறிவை செலுத்தாமல், குறுகிய நிலையில், முடக்கிக் கொள்கிறான். ஒரு பிரமாண்டமான சக்தியை ஒரு குவளையிலும், பானையிலும் அடக்கிவைத்தால் எப்படி பொருந்தும்? அதுதான் அவனுக்கே அது துன்பமாகிறது எனலாம்.
மனிதன் மட்டுமே தன்னிலை மறந்து, தான் என்ற தன்முனைப்பில் செயலாற்றுகிறான். அவனுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்திலுமே இந்த தன்முனைப்பு முதன்மை என்றால் மிகையில்லை. இதனால், அத்தகைய மனிதன், தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். அதன்வழியில் தான் வாழும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் துன்பம் விளைவிக்கிறான். மேலும் இயற்கையின் நீதியாக எல்லாவற்றிலும், அளவும் முறையும் இருக்கிறது.
அது மீறப்பட்டால், அந்த விளைவு உடனடியாகவோ, தாமதமாகவோ, நீண்டகாலம் கழித்தோ நிச்சயமாக உண்டாகிறது. அந்த விளைவுகளின் தாக்கமே துன்பமாக அவனுடைய வாழ்வில் வந்துவிடுகிறது. காலத்தால் நிலைத்தும் விடுகிறது.
இதிலிருந்து மீண்டுவரவேண்டும், துன்பமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும், இன்பமாக வாழவேண்டும், நிறைவாக இருக்கவேண்டும் என்றால், முதலில் செய்த தவறுகளை திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அல்லது தவிர்த்து நல்லது செய்யவேண்டும். அதற்கான வழி, யோகமே ஆகும். குருவின் துணையோடுதான் அத்தகைய மாற்றம் நிகழும் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்
-