கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!
பதில்:
நாம் வாழ்கின்ற இந்த உலகவாழ்க்கையில், பணத்தேவை என்பது மிக அவசியமானதே. மேலும் ‘மனிதர்களுக்கு மட்டுமான வாழ்வில்’ என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ மனிதன் இந்த பணம் என்கின்ற அமைப்பிற்குள் சிக்கிவிட்டான். மனிதன் மட்டுமல்ல மனிதமும் சிக்கிவிட்டது. பொருள்முதல்வாத உலகம் எங்கும் நிரம்பிவிட்டது. மனிதர்கள் எல்லோரும் உழைத்து வருமானம் ஈட்டி, பொருள் பெற்று வாழ்தல் அவசியம் என்பதும், அதன்வழியாக மனிதர்களின் தரமும் நிர்ணயிக்கப்படுவதும் நிலைத்துவிட்டது. அதில் நாமும் வெற்றி பெறவேண்டியது அவசியமே.
பணத்தேவையை பூர்த்தி செய்யாமல், நாம் இந்த உலகில் வாழ்வும் முடியாது.
சில அடிப்படை விசயங்களை பெறவும் பணம் அவசியமாகிறது. முக்கியமாக, ஒரு மனிதன் சும்மா, வெறுமனே இருக்கக்கூடாது. அவன் உழைக்கவேண்டும், தன்னுடைய உழைப்பை, உலகுக்கு, சமூகத்திற்கு, பிறமனிதர்களுக்கு தரவேண்டும், அதற்கு அந்த மனிதன் சன்மானம், வெகுமதி பெற்றுக்கொள்ளலாம் என்பது உலம் ஏற்றுக்கொண்ட ஒரு நியதி. குழந்தைகளும், வயோதிகர்களும் மட்டுமே விதிவிலக்கு. சிலவேளைகளில் அவர்களும் சிக்கிக் கொண்டு துன்புறுகின்றனர். துன்புறுத்தவும்படுகின்றனர்.
இந்த பணத்தேவை, தனிமனிதனுக்கும் அவசியம், குடும்பம் என்ற சமூக நிலையில் வாழ்பவருக்கும் அவசியம். கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால், தனித்தனி நபர்களும், இந்த பணத்தேவையை நிவர்த்தி செய்ய உழைக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் ‘யோகம்’ என்பதும் அவசியமாகிறது. ஆனால் பணத்தேவை யோகத்திற்கு தடையா? என்ற கேள்வியும், யோகத்திற்கு பணம் தடையா? என்பதும் அவசியமற்ற கேள்விகளாகும். எப்படி என்பதையும் பார்க்கலாம்.
சராசரியாக ஒரு குடும்பத்தின் தேவை, இன்றைய காலத்தில் இந்திய ரூபாய் 20000/- (இருபதாயிரம்) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த வருமானம் குறைவு, யோகத்தில் பயணிக்க முடியாது என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது பற்றாக்குறை என்றால், கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பொழுது இந்த தொகையை ரூபாய் 40000/- (நாற்பதாயிரம்) என்று வைத்துக்கொண்டால், யோகத்திற்கு தடையில்லைதானே? ஆனால் யோகத்திற்கு வந்துவிடுவார்களா? இல்லையே.
அப்படியானால், மாதத்திற்கு 80000/- (எண்பதாயிரம்) வருமானம் ஈட்டுபவர்கள் யோகத்தில் இணைந்திருக்கிறார்களா? அதுவும் இல்லையே. எவ்வளவு வருமானமும் ஈட்டினாலும்கூட குறைவு மனப்பான்மையில் அவர்கள் சிக்கியிருந்தால், யோகம் அவர்களுக்கு கசக்கும். எனவே, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்பதெல்லாம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல ‘சப்பைக்கட்டு’. நீங்களும் இந்த உண்மையை ஆராய்ந்து பார்த்து விளக்கம் பெறமுடியும்.
உங்களுடைய தேவை என்ன? குடும்பத்தின் தேவை என்ன? வருமானம் எந்தெந்த வகையில் ஈட்டமுடிகிறது? எவ்வளவு வருகிறது? அதன் செலவும், அளவும், முறையும் என்ன? வருங்கால தேவை என்ன? அதற்கான சேமிப்பு எவ்வளவு? என்பதெல்லாம் ஆராய்ந்து கணித்துப்பாருங்கள். யோகத்தில் நீங்கள் முழுமனதோடு இணைந்து பயணிக்கலாம் என்பதே முடிவாகும்!
வாழ்க வளமுடன்.
-