The truth explanation of the first elements of Akash in the panjaboothas system
பஞ்சபூத தோற்றத்தின் முதல் தோற்றமான ஆகாசம் (Space) என்பது குறித்த உண்மை விளக்கம் என்ன?
ஆகாசம் என்பது பஞ்ச பூத தோற்றத்தில் முதன்மையானது ஆகும். அதுவே தமிழில் விண் என்று சொல்லுகிறோம். இதன் இன்னொரு சிறப்பு பெயர், உயிர் ஆகும். ஆனால் அது ஜீவன் என்ற உயிரினங்களில் மட்டுமே இருக்கும் நிலையாகும். இந்த ஆகாசம், பல்லாயிரம் கோடி, பரமாணுக்கள் கூடிய ஒரு தோற்றம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆகாசம் சுழன்றுகொண்டே இருக்கக்கூடியது. நிறை மற்றும் எடை அளவில் மிகவும் லேசானது. கண்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாதது. ஆனால், மனிதன் தன் மனதால், அறியக்கூடியது. சித்தர்கள், இதை சித்து என்றழைத்தனர்.
இந்த ஆகாசத்தின் சுழற்சியினால்தான், அதன் மையப்பகுதியில் இருந்து, காந்தம் என்பது உருவாகி, விரிவலையாக வெளி வருகிறது. பொதுவாக இந்த ஆகாசத்தை, மூன்றாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று, மகா காசம். இரண்டு, பூதா காசம். மூன்று, சித்தா காசம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மகா காசம். இதுதான் வான் காந்தக்களம் என்பதாகும். அதே ஆகாசத் துகள்கள் பொருட்களில் மடிந்தியங்கும் போது, அதைப் பூதா காசம் என்று சொல்கிறோம். அதுவே உயிர்களின் உடலில் எல்லைகட்டி இயங்கும்போது, அதைச் சித்தா காசம் என்கிறோம்.
நம்முடைய உடல், பஞ்ச பூதத்தின் கூட்டு. பிரிதிவி என்ற கெட்டிப்பொருள், மண் நம்முடைய, உடலாகவும். அப்பு என்ற நீர் என்பது இரத்தமாகவும், தேயு என்ற வெப்பம் என்பது உடல் நடத்தும் சூடாகவும், வாயு என்ற காற்று என்பது பிராண சக்தியாகவும், ஆகாசம் என்ற விண் அல்லது உயிர் எல்லாவற்றையும், இணைத்து இயக்கும் சக்தியாகவும் இருக்கிறது. கூடுதல் சக்தியாக, ஜீவகாந்தம் உருவாகி, மனமாக இருக்கிறது. அந்த மனதைக் கொண்டுதான், யோகத்தின் வழியாக, இந்த உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம். மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தையும் பெறுகிறோம்.
வாழ்க வளமுடன்.