Difference between the Siddhar kundalini yoga and Vethathiriya.
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று விளக்குவீர்களா?
பதில்:
வேதாத்திரியம் தந்த, வேதாத்திரி மகரிஷியைக் கூட சித்தர் என்று அழைப்பது பொருத்தமானதுதான். முதலில் சித்தர்கள் என்றால், சித்து என்ற உயிரை, அதன் இருப்பை, தன்மையை, மதிப்பை, இயக்கத்தை அறிந்து உணர்ந்தவர்கள் என்பதாகும். சித்தர்களே, வெட்டவெளி தத்துவத்தை சிவமாக ஏற்று, அதை குண்டலினி யோகத்தின் வழியாக எப்படி பெறுவது என்ற வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும் வடிவமைத்து தந்தார்கள். விரும்பியோருக்கு பயிற்றுவித்தார்கள். கவி பாடல்களாக எழுதியும் வைத்தார்கள். உலகெங்கும் சென்று அங்காங்கே இருந்த மக்களுக்கும் அதை பக்தி வழியில் வழிபாடகவும் அமைத்துத் தந்தார்கள். பின்னாளில்தான் பக்தியில் குழப்பங்கள் நேர்ந்து, சித்தர்களின் உண்மையான கருத்தும், நோக்கமும் சிதைந்துவிட்டது.
உங்களுக்குத் தெரியுமா? இன்றைய, இப்போதைய காலகட்டத்திலும் அத்தகைய சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
சித்தர்களின் யோகமுறை கடினமானது. என்றாலும் கூட காலத்தால் அவை எளிமையாக மாற்றம் பெற்றன. உலகெங்கும் அந்த சித்தர்களின் வழியாக வந்தவர்கள், அதை ஆராய்ந்து வந்ததால், இறையாற்றலின் கருணையாலும் அத்தகைய எளிய முறைகள் சாத்தியமாகிற்று. எனினும் அந்தக்கால கடின முறையை இப்போதும் பின்பற்றுபவர்கள் உண்டு.
வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம், அத்தகைய எளியமுறையைத்தான் பின்பற்றுகிறது. சித்தர்கள் தந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, தற்கான விஞ்ஞான வளர்ச்சியில், எது ஏற்றதோ அதைக் கொண்டு, இறைதத்துவத்தை விளக்குகிறது. சித்தர்கள் கண்டு இவ்வுலகுக்கு தந்த காந்தம் என்ற உண்மை விளக்கம், கந்தனாகி பக்தியில் நின்றுவிட்டது. அதே காந்தம், வேதாத்திரியத்தில் வான்காந்தமாகவும், ஜீவகாந்தமாகவும் மலர்ந்து விட்ட உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.
எனவே, சித்தர்களின் சித்தர்களின் யோகமுறைக்கும், வேதாத்திரியத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால், பெரும் வித்தியாசம் ஏதுமின்றி, இக்கால மனித அறிவின் வளர்சிக்கு ஏற்றபடி, இறை தத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுப்பது மட்டுமேதான்.
வாழ்க வளமுடன்.