Why need yoga instead of 1000 ways to practice our mind for positive vibes? | CJ

Why need yoga instead of 1000 ways to practice our mind for positive vibes?

Why need yoga instead of 1000 ways to practice our mind for positive vibes?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை பக்குவமாக வைக்க ஆயிரம் பயிற்சிகள் இருக்கும் பொழுது, யோகம் தேவைதானா?


பதில்:

இப்படித்தான் பலரும் பலவிதமாக சொல்லிச்சொல்லி உங்களை குழப்பமடைய வைத்திருக்கிறார்கள். அத்தகைய ஆயிரம் பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றையாவது நன்றாக கற்று கடைபிடித்து உயர்ந்தவர்கள் உண்டா? அவர்களை நீங்கள் அறிவீர்களா? அவர்களோடு பேசி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் சொல்லும் விளக்கங்களை கேட்டு தெளிவு பெற உங்களால் முடிந்ததா?

நீங்கள் சொல்லுவதுபோல மனதை பக்குவமாக வைக்க ஆயிரம் பயிற்சிகள் உண்டுதான், அதற்கு மேலாகவும் இருக்கக்கூடும் என்பதே உண்மை. ஆனால் மனம் என்பதின் அடிப்படையை புரிந்துகொள்ளாமல், மேலோட்டமான பழக்கத்தை மட்டும் கற்றுக்கொள்வது, மனதை பழகிக் கொள்வதும் பலன் தராது. ஏதோ ஒரு சில நாள் அப்படியான நன்மையும், நல்ல நிலையும் அடைந்துவிட்டதாக நீங்கள் கருதலாம். ஆனாலும் சில நாட்களுக்குப்பிறகு வழக்கமான நடைமுறைக்கு மனம் வந்துவிடும். ஏனென்றால் மனதை அதன் பக்குவத்தோடுதான் பழக்கப்படுத்த வேண்டும். சாதாரணமான பயிற்சிகளும், கட்டளைகளும் உதவாது. அதுப்போல சிலர் சொல்லுகிறார்கள். ,மனதை ஒதுக்கிவைத்துவிட்டு, அதை கண்டு கொள்ளாமல், கனவத்தை திருப்பாமல், நீங்கள் தெளிவாக நடந்துகொள்ள பழகுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். இதுவும் உங்களுக்கும், மனதிற்கும் உதவாத அறிவுரைதான். 

முக்கியமாக, நவீன காலத்தில் மனதை பக்குவப்படுத்த அவர்கள் சொல்லும், மிக பொதுவான வழிமுறை, ‘நன்றாக தூங்குங்கள்’ என்பதுதான். அதை ஊக்கப்படுத்த சில மருந்து மாத்திரைகளையும் பரிந்துரை செய்வார்கள் என்பது பொதுவானது.

யோகம் என்பது என்ன? என்று புரிந்துகொள்ளாதவர்களும், அதை மறுப்பவர்களும், அவசியமற்றது என்று நினைப்பவர்கள்தான் குறுக்குவழியாக யோசித்து, மனதை இப்படி அப்படி பக்குவப்படுத்தினால போதும் என்று சொல்லுகிறார்கள். யோகம் என்றாலே, வாழும் அறநெறி முறைதான் தவிர வேறெந்த அர்த்தமும் இல்லை.

யோகத்தின் வழியாக, மனதை அறிந்து, அடிப்படை உணர்ந்து தெளிந்து, மனதின் இயக்கம், ஆற்றல், செயல், விளைவு எல்லாம் அறிந்து பிறகு, மனதை தவத்தின் வழியாக கவனிக்கிறோம். அதன் சுழல் இயக்க விரைவை, இயல்பான நிலை கொண்டுவந்து பழகுகிறோம். உண்மையை சொன்னால், மனதோடு நாம் கைகோர்த்து, இணைகிறோம் என்பதே இங்கே நிகழ்கிறது. எனவே என்னதான் நீங்கள் மனதை, சராசரி உலக நடைமுறையில் பக்குவப்படுத்த முயன்றாலும் அது நிலைக்காது என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.