Why i need to bless someone who made suffer to me? Which purpose?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நமக்கு துன்பம் தந்த ஒருவரை வாழ்த்த சொல்லுகிறீர்களே? அதனால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது?
பதில்:
நமக்கு துன்பம் எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்த தவறின் விளைவாக நேரடியாக, அப்போதே கிடைக்கும் துன்பம் ஒருவகை. நம் வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் செய்து நாம் மறந்துவிட்ட செயலின் விளைவாக வரும் துன்பம் இன்னொரு வகை. நாம் எதுவுமே செய்யாமல், நம்முடைய கர்மா என்ற வினைப்பதிவின் வழியாக எழுகின்ற துன்பம் மற்றொருவகை. இதில் எது நமக்கு கிடைத்திருக்கிறது என்று உடனடியாக ஆராய்ச்சி செய்து கண்டுபடிப்பது கடினமே. என்றாலும் நம் பெறுகின்ற துன்பத்தால் நம்மிடமிருந்து ஒரு களங்கம் தீர்கிறது, வெளியேறுகிறது என்று அர்த்தம் கொள்வதுதான் சிறந்தது. அப்படியாக அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிடுவது நல்லதுதான். இதெல்லாம் சாத்தியமானதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது! பிறகென்ன, அவர் செய்ததுக்கு நீங்கள் திருப்பி துன்பம் கொடுங்கள். பிறகு மீண்டும் அவர் தருவார், மறுபடியும் நீங்கள் கொடுங்கள்... இப்படியே போனால் எப்போது இது தீர்வது? சிந்தித்துப் பாருங்கள்.
நம்முடைய கர்மா என்ற வினைப்பதிவு களங்கத்தை நாம், குண்டலினி யோகத்தின் வழியாகவே தீர்க்க முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாதபோது, அந்த பயணத்தில் நாம் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நமக்கு துன்பம் தந்த ஒருவரை, நம் களங்கத்தை போக்கிட கருவியாக இருந்த அவரை வாழ்த்துகிறோம், அவ்வளவுதான். இதனால் அவருக்கு நன்மையா? நமக்கு நன்மையா? என்ற ஆராய்ச்சிக்கு இங்கே இடமில்லை. ஒருவேளை நீங்கள் அவரை வாழ்த்துவதால் இனி உங்களுக்கு அவர் துன்பம் விளைவிக்காத நிலை வரலாம் அல்லவா? எனவே, நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ள, அவர் ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் என்று எண்ணி, அவரை வாழ்த்தலாம். அதில் எந்த தவறும் இல்லை. அப்படியான இறை நீதிக்கும் நாம் நன்றி சொல்லுகிறோம் என்பதே உண்மை.
வாழ்க வளமுடன்.