Isn't it true that if you join yoga, you will lose money making?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?
பதில்:
உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.
உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.
பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.
உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும்.
‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.
யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!
வாழ்க வளமுடன்.