Is soul and life force (uyir) the same?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதானா?
பதில்:
பொதுவான வழக்கத்தில் இரண்டும் ஒன்றே என்று புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. எப்படியென்றால், உலகில் வாழும் வாழ்க்கை வரை உயிர் என்றும், அதுவே இறந்துவிட்டால் ஆன்மா என்றும் சொல்லிவருகிறார்கள். ஆனால், உயிர் என்பதும், ஆன்மா என்பது வேறுவேறு என்பது உறுதியானது.
உயிர் என்பது நுண் துகளாகிய, விண் என்ற ஆகாஷ் துகள்கள் ஆகும். இவை நாம் கருவானது முதல், உடல் வளர்ந்து, அந்த உடலில் சிறைபட்டு, உடல்முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது தன்னுடைய சுழற்சியில் மாற்றம் கொள்ளும். அதாவது, மனிதனின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேறிடவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இந்தக்குறையை உடனடியாக சரி செய்துவிட முடியாது எனினும், மன அமைதி, நற்சிந்தனை, தெய்வீக வழிபாடு, தவம், தியானம், தகுந்த உணவு முறைகள், மகான்களை சந்தித்து ஆசிபெறுதல் வழியாக சரி செய்யலாம்.
இந்த உயிரை அடிப்படையாகக்கொண்டே ஆன்மா செயல்படுகிறது. அதாவது உயிரின் படர்க்கை நிலையாக, மனமும் ஆன்மாவுமாக. மேலும் ஆன்மா என்பதே வாழும் பொழுதும், வாழ்க்கை முடித்த பிறகும், எக்காலத்தும் நிலைத்தும் இருக்கும் என்பதும் உண்மை. இந்த ஆன்மாவின் மேலோட்டமான இயக்க நிலையையே ஒவ்வொருவருடைய மனம் என்றும் சொல்லலாம்.
எனவே ஆன்மா என்பதும், உயிர் என்பது தனித் தனியானதுதான்.
வாழ்க வளமுடன்.