Why I am not interested on simplified exercise?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதே எப்படி திருத்தலாம்?
பதில்:
அந்த அளவிற்கு உங்கள் மனதை கெடுத்துவைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல, உலகில் கோடிக்கணக்கான இளைஞ சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். காரணம், உலகில் ஏற்பட்டிருக்கும் தகவல் தொடர்பு மலர்ச்சி. உலகை கைகளில் சுருக்கி கைபேசி வடிவில் தந்துவிட்டதால், கண்களுக்கும், விரல்களுக்கும் மட்டுமே அதிக பயிற்சியும், குரலுக்கு கொஞ்சம் பயிற்சியும் தந்துகொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
தனியாக, உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி தேவையா? என்று அவர்களே அதை தவிர்த்தும் விடுகின்றனர். முதலில் நீங்கள் சொன்ன சோம்பேறித்தனம் எப்படி வருகிறது என்பதை அறிந்திடுங்கள். உங்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமில்லை. அதை செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்த அக்கறை இல்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு எதற்காக பயிற்சி என்ற அசட்டுத்தனம். ஆனால் உடல் உங்களின் அன்றாட நடவடிக்கைகளால் சோர்வடைகிறது என்பதை நீங்கள் அறிவதே இல்லை. மேலும் மேலும் உடலை படாதபாடு படுத்தி, பகல்முழுவதும் உயயோகப்படுத்திவிட்டு, இரவிலும் கூடுதலாக கஷ்டப்படுத்துகிறீர்கள். இந்த உடலுக்கென்று பாஷை இல்லை. அதனால் அது என்னைவிட்டுவிடு என்று ஒருபோதும் சொல்லாது.
உங்களுக்கு ஏற்றபடி அது உங்களோடு பயணிக்கும். தீடீரென்று ஒருநாள் ஒரு தலைவலி என்று ஆரம்பிக்கும், பிறகு காய்ச்சல், உடல் வலி, சதை பிடிப்பு, உடலில் சூடு, கண்கள் வீக்கம், மூக்கில் சளி, இருமல் என்று படிப்படியாக ஆரம்பித்து நாளடைவில், ஒரு நோய்க்கான அறிகுறியைக் காட்டி, உங்களை படுக்கையில் வீழ்த்தும். அப்போதும் ஏதேனும் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, மருந்துகள் சாப்பிட்டு, உடலுக்கு ஊக்கம் கொடுத்து, பழையபடி அதே வேலையை ஆரம்பிப்பீர்கள். இந்த முறை முன்னைவிட பலவீனமாக மீண்டும் உடல் விழும். இது தேவைதானா? சிந்திப்பீர்.
இயல்பாக, நன்றாக இருக்கும் பொழுதே, உடல்மீது அக்கறை கொண்டு, கவனித்து, பயிற்சியால் ஊக்கம் கொடுத்து வந்தால், வாழ்நாள் முழுவதும் எக்குறையும் இன்றி வாழமுடியுமே? அதை ஏன் தவிர்க்கிறீர்கள்? சிந்திப்பீர். தெளிவீர், உயர்வீர்!
வாழ்க வளமுடன்.