I want to attain mukti through bhakti marga. Is that wrong?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழியாக இறையிடம் முக்தி அடைவதையே நான் விரும்புகிறேன். அது தவறா?
பதில்:
உலகில் பிறப்பெடுத்த மனிதனின் நோக்கமே, இறையுணர்வு பெற்று முக்தி என்ற வீடுபேறு நிலை அடைவதே ஆகும்! எனவே உங்கள் நோக்கம், விருப்பம் தவறில்லை. என்றாலும் அங்கே இறை என்ற உண்மையை அறிந்து உணர்ந்து கொள்வதில் தடை இருக்கிறதே? அதற்காக மறுபடி பிறந்திடமுடியுமா என்ன? அதையும் வாழும் நாளிலேயே, இந்தப்பிறவியிலேயே முடித்துக்கொண்டால் நல்லது தானே?!
இந்த வீடுபேறு என்பது சித்தர்களின் வழியாகும். அத்தகைய வீடுபேறு, யோகத்தின் வழியாக தவமும் அறமும் கொண்ட வாழ்வில் கிடைக்கும் என்பதே உறுதியானது. முக்தி, மோட்சம் என்று சொல்லப்படுவதெல்லாம், வேதாந்தத்தின் அடிப்படையிலும், பக்தி வழியிலும் அறியப்படுவதாகும். என்றாலும் வேதாந்தம் மற்றும் பக்தி இரண்டுமே, உங்களை இறைக்கு மிக அருகில் கொண்டு செல்லுகிறது என்றுதான் குறிப்பிடப்படுகிறது. முழுவதுமாக மெய்பொருளான இறையை உணர்ந்து அறிந்துகொள்வதற்கு, யோகம் தான் உதவுகிறது என்பதையும் இங்கே தெளிவு செய்ய வேண்டியதாக உள்ளது.
உங்களுக்கு பக்தி வழிதான் சிறப்பு என்று உணர்ந்தால், தாராளமாக அதை தொடரலாம். யாரும் தடை சொல்லப்போவதில்லை. இங்கே கூட உங்களுக்கு விளக்கம்தான் சொல்லப்படுகிறதே தவிர குறையோ, தடையோ ஏதும் சொல்லுவதற்கில்லை. மேலும் மனித மனம், பல தலைமுறைகளாக பக்திவழியில் ஆழ்ந்துவிட்டது. முக்கியமாக, பக்தியில் சொல்லப்பட்ட உண்மைகள் எல்லாமே, திரிந்து விலகிவிட்டது. வெறும் கதைகளும், சடங்குகளும் அருகிவிட்டன. பக்தியில் எழும் சந்தேகங்களை தீர்க்கவும் ஆட்களில்லை. ஏதேனும் கேட்டாலும், வழிபாடு செய்க சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வார்த்தைகள்தான் கிடைக்கின்றன என்பது உண்மைதானே?! இந்த பக்தி வழிபாடுகளிலும், சடங்குகளிலும், நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் சில ஏமாற்றங்களை கண்டவர்கள் ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் அளவிற்கும் போய்விட்டனர்.
மேலும் மனிதமனம், கடந்து உள்ளே செல்வதற்கு பதிலாக கடவுளை பல்வேறு உருவநிலைகளாக உருவகம் கொண்டு பதிந்து கொண்டுவிட்டது. அவ்வளவையும் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் மனதிற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் உங்கள் பக்தி வழியாக இறையிடம் முக்தி அடைவதை தொடருங்கள். அதோடு எது உண்மை இறை என்பதையும் ஆராயுங்கள்!
வாழ்க வளமுடன்.