What benefit am I get from greeting the enemy? | CJ

What benefit am I get from greeting the enemy?

What benefit am I get from greeting the enemy?


எதிரியை வாழ்த்துவதால் எனக்கென்ன பலன் கிடைத்துவிடப்போகிறது?


கடந்த வாரத்தில் அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? என்ற கேள்வியோடு வாக்குகள் செலுத்த அன்பர்களை கேட்டுக்கொண்டோம். அதற்கு கிடைத்த வாக்கு விபரம் பாருங்கள்...

நிச்சயமாக காலத்தால் மாறிடும் சரியாகும் உண்மை 77% (அதிக வாக்கு)

என்று கிடைத்திருந்தாலும், இந்த வாக்கு ஏதோ ஒப்புக்கு கொடுத்துள்ளார்களோ என்று தோன்றுகிறது. அதாவது சும்மா போட்டுவைப்போம் என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். இதை எப்படி நாம் கண்டுபிடித்தோம் என்றால், இந்த வாக்குப்பதிவின் முடிவையும், அதற்கான விளக்கப்பதிவையும் 12% அன்பர்கள்தான் பார்த்து படித்திருக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவருகிறது.

நீ என்னமோ சொல்லிக்கய்யா, நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள தயாரில்லை என்ற நிலைக்கு போய்விட்டார்களோ என்று கருதிட இடமிருக்கிறது.

ஏனென்றால். இந்த வாக்குப்பதிவு வழியாக நாம் அறிந்துகொண்டது, 12% அன்பர்கள் மட்டுமே எதிரியை அல்லது எதிரியாக செயல்படுபவரை வாழ்த்திடவும், வாழ்த்தின் வழியாக திருத்தவும், தன் வழியை சரி செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள். அந்த 12% அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஏறக்குறைய 88% அன்பர்கள், எதிரியை பழிவாங்கிட நினைக்கிறார்கள், அப்படி பழிவாங்கிட சந்தர்ப்பம் கிடைக்க காத்திருக்கிறார்கள், அதை வஞ்சமாக மனதிற்குள் போட்டுக் கொள்கிறார்கள். கூடுதலாக அதை ஒரு கர்மாவாகவும் பதிந்துவைத்து விடுகிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. 

ஆனால் அந்த 88% அன்பர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன சொல்லுவார்கள் என்றால், அவர்களை அப்படியே விட்டுவிட்டோம், ஒதுக்கி தள்ளிவிட்டோம் என்று மறுப்பு தெரிவிப்பார்கள்.

ஆனால் அந்த எதிரியால் நீங்கள் பாதிக்கப்பட்டது உண்மைதானே? அந்த காயம் மனதிற்குள் மறைந்தாலும் வடுவாக இருக்கிறதே? எப்போது நினைத்தாலும் அது கண்முன் நிகழ்கிறதுதானே? அப்போதைய சினமும், என்னால் எதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தமும், இப்படி செய்துவிட்டாரே (னே) என்ற நிலைபாடும் அப்படியே காட்சியாக வருகிறது அல்லவா? அதை எப்படி போக்குவீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்கூட இது மாறுவதற்கு வழி உண்டா? சிந்தித்தீர்களா? வேறு என்னதான் செய்யப்போகிறீர்கள்?

அவரை அந்த எதிரியை, உங்களுக்கு துன்பம் தந்த எதிரியை அப்படியே விட்டுவிட்டோம் என்றால், நீங்கள் முன்னைவிட தெளிவாக, உங்கள் செயலில், கருத்தில் நிலைத்து, இயல்பாக அல்லவா இருக்கவேண்டும்? மேலும் வழக்கமான மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே? அப்படி இருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்களேன்.

ஒரு எதிரியை, உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் சந்தித்த எதிரியை வாழ்த்துவதால், நீங்கள் அந்த வருத்தத்தில் இருந்தும், பதிவில் இருந்தும் விலகுகிறீர்கள் என்பதே உண்மை. மேலும் அந்த எதிரியை வாழ்த்திக்கொண்டே இருப்பதால், அந்த எதிரி குறித்தான் எண்ணம் உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலையும் வராது, பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அதற்கான திட்டமும் உருவாகாது. ஆனால் அந்த வாழ்த்தினால் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

உங்களைச் சுற்றி உண்மையிலேயே ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தே என்றும் சொல்லலாம். ஏற்கனவே உங்களை துன்பத்திற்கு ஆளாக்கிய எதிரி, உங்கள் வாழ்த்தால் மறுபடி எதுவும் செய்யாத நிலைக்கு உங்களை மாற்றிக்கொள்கிறீர்கள். உங்கள் வாழ்த்தால் உங்களுக்கு தீங்கிழைத்த எதிரியின் மன நிலையும் மாற்றம் அடைகிறது என்பதே இங்கே முக்கியமானது. உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியதற்கு, அந்த எதிரியே மனவருத்தம் அடைவதும் நிகழும். காலத்தால் அவரே உங்களிடம் வந்து, மன்னிப்பு கேட்பதும் கூட நிகழ வாய்ப்புள்ளது. ஏனென்றால் இயற்கையின் விதி அத்தகையது.

இதை ஏன் நம்ப மறுக்குறீர்கள் என்று தெரியவில்லை. வாழ்த்தின் உண்மையை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வழிநடப்போருக்கு, வாழ்த்து பேருதவி அளிக்கும் என்பது அனுபவப்பூர்வமானது ஆகும்.

வாழ்க வளமுடன்.

-

இந்தபதிவின் மூலக்கட்டுரை இங்கே இருக்கிறது!

வேதாத்திரிய வாக்குப்பதிவு.

அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?

வாக்கின் முடிவும் - விளக்கமும்

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!