Why most of saints distract our expectations on their meet?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
ஞானிகளிடம் இன்பமான வாழ்வைப்பற்றி பேசி, கேள்விகேட்டால், துன்பமாகவே கருதும்படி சொல்லுகிறார்களே? அதனாலேயே அவர்கள் மேல் வெறுப்பாகிறது!
பதில்:
உங்கள் மனநிலையின் கருத்தை அப்படியே சொன்னதற்கு நன்றி. இதற்கு தகுந்த பதில் உண்டு. ஞானிகளும் உங்களைப்போல பிறந்து வளர்ந்து, உலக இன்பங்களில் திளைத்தவர்தான். ஞானி என்றுமே தனியாக உருவாகி பிறந்து வருவதில்லை என்பதை அறிக. சொல்லப்போனால் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும், நீங்களும், இதற்கு முன் பிறந்தோரும் கூட அப்படியான தகுதி பெற்றவர்கள் தான். ஆனால் அதை நாம் உணர்ந்து, நம்மை திருத்தி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு ஆர்வமும் கொள்ளவில்லை.
இந்த உலகில், எதோ பிறந்தோம், வளர்ந்தோம், இன்ப துன்பம் அனுபவித்தோம், வாழ்க்கைத்துணையை கண்டோம், கூடி வாழ்ந்தோம், பிள்ளைகளை பெற்றோம், வளர்த்து ஆளாக்கினோம், பேரப்பிள்ளைகளை கண்டோம், போய்ச்சேருவோம் என்று வாழ்வை முடித்து விடுகிறோம்.
இப்பொழுது ஞானியாக இருப்பவரும் அப்படியான வாழ்க்கைச்சூழலில் சிக்கியவர்தான். யாரோ ஒரு சிலர்தான், திருமண பந்தத்தில் சிக்காது, பிரம்மச்சாரியத்தில் நிலைக்கின்றார். அது அவரவர் விருப்பத்தில் தான் நிகழ்கிறது. மற்றோர் எல்லோரும், வாழ்கின்ற வாழ்க்கையில் இந்த இன்பம் போதவில்லை, துன்பம்தானே எங்கும் விளைகிறது? என்று சிந்தித்து, எது உண்மையான இன்பம் என்று தேடுகிறார்கள். வணங்கும் கடவுளை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. அனுபவி என்றுதான் சொல்லுகிறதாக தோன்றுகிறது. அதனால் அவர் குருவை தேடி சரணடைகிறார். கடவுள் என்பதை கட+உள் என்று புரிந்து கொள்கிறார். அந்த வழியில் தவம் செய்து, தற்சோதனையில் தன்னை திருத்தி, மனதை புலன்களில் இருந்து விடுவித்து, எது உண்மை இன்பம், இயற்கை என்பது என்ன? இறை என்பது என்ன? நான் யார்? என்று தன்னையறிகிறார். இறையுணர்வு பெறுகிறார். அதனால் அவர் ஞானி ஆகிறார்.
ஆகவே ஞானிகளுக்கு மட்டுமே எது உண்மை இன்பம், பேரின்பம், அமைதி, முழுமை என்பது தெரியும். அதை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறார். ஆனால் நாம்தான் அதை கேட்டுக்கொள்ளும் தன்மையில் இல்லை. இவரிடம் போனால், வாழ்வையே விடச்சொல்லுவார் என்று பயப்படுகிறார்கள், அவரை ஒதுக்கித்தள்ளுகிறார். உண்மையான தன் பிறவிக்கடனை, இப்பிறவியில் ஒதுக்கித்தள்ளுவது போலவெ! இந்த உண்மை தெரிந்த பிறகாவது, ஞானிகளின் சொல்லை கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். மாற்றம் உண்டாகும்!
வாழ்க வளமுடன்.
-