How long I need to connect with yoga center after completed course? | CJ

How long I need to connect with yoga center after completed course?

How long I need to connect with yoga center after completed course?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுணர்வு பெறவும் தன்னை அறியவும் எவ்வளவுகாலம் மன்றத்தொடர்பு அவசியமாகிறது?


பதில்:

உங்கள் வேதாத்திரிய யோக கல்வி பயணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே எல்லா பயிற்சிகளையும் முடித்துவிட்டு ‘அருள்நிதி’ என்ற நிலைக்கு உயர்ந்துவிடலாம். இதுவே போதுமானதுதான். அதாவது, நாம் நம்முடைய பிறவிக்கடன் தீர்ப்பதான, கர்மா என்ற வினைப்பதிவு களங்கள் போக்குதல், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து நம்மை தெளிவான முடிவுகளின் வழியாக, அளவுமுறையோடு வாழ்ந்து இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு வாழ மாற்றம் பெறலாம். தொடர்ந்து ஓவ்வொருநாளும் இயற்றுகின்ற தவத்தின் வழியாக, நான் யார்? என்ற கேள்வியின் ஊடாக, தன்னையறியலாம், இறையுணர்வும் பெறலாம்.

இதற்கிடையில் நாம் நம்மை ஊக்கம் பெற்றுக்கொள்ளவே, மன்றத்தொடர்பும், கூட்டுத்தவமும், சிந்தனை விளக்க உரைகளும் தேவைப்படுகிறது. மேலும் மன்றத்தில் பலரோடு பழகி தம் சிந்தனையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். அவர்களுடைய யோக அனுபவம் நமக்கு உதவக்கூடும். அங்கே நிகழும் கலந்துரையாடலில் விளக்கம் பெறலாம். கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். சந்தேகங்களுக்கு தீர்வும் பெறலாம். இக்காரணங்களால் தான், குறிப்பிட்ட காலம்வரை, அதாவது உங்களுக்கு போதுமானவரை என்றும் சொல்லலாம், மன்றத்தொடர்பு அவசியமாகிறது.

உங்களுக்கு, நீங்கள் கற்றுக்கொண்டதை பிறருக்கும், பகிர்ந்தளிக்க, பாடமாக தர விருப்பம் கொண்டால், அருள்நிதிக்கு அடுத்த நிலைகளான, உதவி பேராசிரியர் நிலை, பேராசிரியர் நிலைக்கும் உயரலாம். அதற்கும் மன்றத்தொடர்பு உதவிடும்!

எனவே நீங்கள் எந்த அளவிற்கு விளக்கம் பெற விரும்புகிறீர்களோ, எந்த அளவிற்கு ஆர்வமுளோர்க்கு பகிர விரும்புகிறீர்களோ அதைப்பொறுத்தே மன்றத்தொடர்பு உங்களுகு தேவைப்படும். ஆனால் இது எதுவும் கட்டாயமல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்!

வாழ்க வளமுடன்.

-