Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution? | CJ

Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?

Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, அடிக்கடி கனவுத்தொல்லை இருக்கிறது. தூக்கமும் இல்லை. இதற்கான காரணம் என்ன?


பதில்:

உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்கள். மேலும் ஏதெனும் நடந்துவிடுமோ என்ற பயமும், அதனோடு கூடிய சிந்தனைக் குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியாக சொல்லலாம். உங்களில் செயலில் நீங்கள் சரியாக இருந்தால் ஏன் பயம் வருகிறது? எனவே உங்களுடைய எந்த செயலிலும் கவனமாக, சரியாக செய்கிறேனா? என்று கவனியுங்கள். அல்லது திட்டமிட்டு அந்த செயலை செய்யுங்கள். பேசும்பொழுதும் கூட அப்படி கவனிக்க வேண்டும். ஏதோ தோன்றியது சொல்லிவிட்டேன் என்று பேசிவிடக்கூடாது. இதனால் நீங்களும் வருத்தப்படுவீர்கள், எதிராளும் வருத்தப்படுவார். அதுவே உங்களை குழப்புகிறது.

இந்த குழப்பங்கள், பயம், சிந்தனை தடுமாற்றம் எல்லாமே உங்கள் அடிமனதில் மிகத்தெளிவாக பதிந்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது, புறமனம் இயங்காத நிலையில், அடிமனம் விழித்துக்கொள்கிறது. அதுதான் இப்படியெல்லாம் செய்தாய், இப்படி விளைவு வந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டும். பிறர் இப்படி செய்தார்கள் என்றும் சொல்லிக்காட்டும். இனிமேல் இந்தமாதிரி செய்யலாமே என்று உங்களுக்கு பாடமும் நடத்தும்.

உங்கள் கனவில், எக்காலத்திற்கும் பொருந்துவதாகவே காட்சிகள் அமையும். அடிமனம் விழித்துக்கொண்டால் உங்களுக்கு தூக்கமும் தடைபடும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூக்கக் கலக்கமும், உடல்சோர்வும் இருக்கும். முக்கியமாக மனதில் நிம்மதி உணர முடியாது. இதனால், அன்றைய புதிய நாளும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வேதாத்திரிய யோகம் கற்றவரானால், இரவில் தூக்கமின்மையும், கனவுகளும் வந்து தொல்லை தருமானால், சாந்தி தவம் செய்துவிட்டு பிறகு தூங்கப்பழகுங்கள். ஒரு மூன்று நாள் இரவில் தவம் செய்துவந்தால் மாற்றம் கிடைக்கும். உங்கள் செயலில், சிந்தனையில், பேச்சில் கவனமாக இருந்து, நல்லதை பேசுவேன், நல்லதை செய்வேன் என்று உறுதிபட இருங்கள். பிறர் மனவருத்தம் பட ஏதும் செய்யாது தவிர்த்துப் பழகுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், கனவுத்தொல்லையில் இருந்தும், தூக்கமின்மையில் இருந்தும் மீண்டுவிடலாம்! மேலும் மனவருத்தம் தரும் சினிமா, தொலைகாட்சி, கைபேசி காட்சி பார்க்காதீர்கள். அதுவும் காரணமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை!

வாழ்க வளமுடன்.