How do we deal with those who deny and oppose whatever they say?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்விலும், தொழில், வியாபார ரீதியிலும், சில நட்பு வட்டங்களிலும் எது சொன்னாலும் மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்களை எப்படி சமாளிப்பது?
பதில்:
மிக நல்ல கேள்வி, சமீப காலமாகவே நானும் கூட இதை அனுபவித்து இருக்கிறேன். இங்கே இணைய தளத்திலும் அப்படியான அனுபவங்கள் உண்டு. அதுவும் இந்த, வேதாத்திரிய சானல், (இப்பொழுது வேதாத்திரிய யோகா) ஆரம்பித்த பிறகு நிறைய நபர்கள், மறுத்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள், அதாவது பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களை சமாளிப்பது ஒரு பெரும் கலைதான்.
பொதுவாகவே, இப்போதைய தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு முந்தைய தலைமுறை என்று வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சொல்லுவதென்றால் 20 வயது முதல் 39 வயதுக்குள்ளான நபர்கள் என்று சொல்லலாம். இதில் பால் பேதம் இல்லவே இல்லை. இவர்கள்தான், எதை யார் சொன்னாலும், உடனே ‘உனக்கு ரொம்பத் தெரியுமோ? அதெல்லாம் அப்படியில்லை, என்னமோ தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது! இதைப்பற்றி ‘இவர்’ என்ன சொல்லுறார் தெரியுமா?’ என்று விலாவரியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.
சொல்லுவது யார்? அவரின் அனுபவம் என்ன? எதன் அடிப்படையில் சொல்லுகிறார்? எதற்காக சொல்லுகிறார்? யாருக்காக சொல்லுகிறார்? இதன் விளைவு யாருக்கு எப்படி இருக்கும்? நன்மைதானா? என்னதான் முடிவாக சொல்ல வருகிறார்? என்றெல்லாம் நிறுத்தி நிதானமாக ஆராய்வதில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, உதாரணமாக காட்டி, ‘நீ இதானே சொல்லுகிறாய்? இதற்கு மேலும் இதைத்தான் சொல்லுவாய்!’ என்று முடிவு செய்துவிடுவார்கள்.
இப்படி வாதிடுபவர்களிடம் நாம் ஒன்றும் பேசுவதற்கில்லை. அப்படியா? சரி இனி நான் திருத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. ஏனென்றால், மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்கள், தன்முனைப்புக்கான நல்ல உதாரணப்புருஷர்கள். இவர்களோடு மல்லுகட்டுவது உங்களுக்கு கடினம். ஏனென்றால் நாம் பொதுவாக, யோகத்தில் இணைந்து அதன் வழியாக பயணிக்கிறோம். நாம் எதை விளக்க முயற்சித்தாலும் அது வேறுவிதமாகவே திரும்பும். நாம் சொல்லுவதை வைத்தே நம்மை மடக்கவே நினைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களின் தன்முனைப்பில், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆம் நீ வெற்றியாளன் தான் என்று நீங்கள் அவரை உறுதி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள். கூடவே வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் விடுங்கள். அதுவே போதுமானது!
வாழ்க வளமுடன்.