Why I can't understand the truth of Yoga? Please Explain!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் உண்மையை ஏன் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கமுடியுமா?
பதில்:
அந்த அளவிற்கு யோகத்திற்கான விளக்கம், மனிதர்களால் குழப்பமுற்று இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம். நீங்கள் சாதாரணமாக யாரிடமாவது போய்
‘ஐயா, நான் யோகத்தில் இணைந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியுமா?’ என்று கேட்டுப்பாருங்கள்.
‘அதெல்லாம் காலம் போன கடைசியிலே போய்க்கலாம், இப்போ உன் பொழைப்பை பாருப்பா’ என்று பதிலளிப்பார்கள். இன்னும் கூடுதலாக,
‘உனக்குலாம் இன்னும் வயசு இருக்கு, நல்லா அனுபவிச்சுட்டு போ. நல்ல வயசுலயே ஏன் சாமியாரா போகனும்னு சொல்ற. அதுக்கெல்லாம் தனியா பிறப்புன்னு ஒன்னு அமையனும், அப்போ பாத்துக்கலாம் போ’ என்றும் சொல்லுவார்கள்.
ஏன் இந்த பிறப்பை அதற்காக, உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா? ஏற்கனவே தாய் தந்தையால் முடியாத நிலையில்தானே, என்னுடைய பிறப்பும் நிழந்திருக்கிறது. அவர்களுக்காகவும், என் மூதாதையருக்காகவும், நான் என் வாழ்நாளில் யோகத்தில் இணையக்கூடாதா? இதற்குமேலும் விளக்கமறியாமல், என் பிள்ளைகளையும் பெற்று, அவர்களையும் இப்படி வாழ்விட்டு, இந்த உலகில் சராசரி இன்பதுன்பங்களில் வாழ்ந்துதான் சாகவேண்டுமா? இப்படியே என் பரம்பரை போய்க்கொண்டே இருந்தால் என்றைக்கு, கர்மா என்ற வினைப்பதிவை தூய்மை செய்து, நான் யார்? என்று தன்னையறிந்து உண்மை விளக்கம் பெற்று, பிறவிக்கடனை தீர்ப்பது? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.
பிறந்தால் துன்பமும் இன்பமும் இருக்கும் என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. துன்பம் என்பது இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேதாத்திரி மகரிஷியும், துன்பம் என்பது தனியாக இல்லை, இன்பத்தின் அளவு மீறும்பொழுது, ஏற்படும் பொருத்தமில்லாத உணர்ச்சி தான் துன்பம் என்று விளக்கமாக சொல்லுகிறார்.
எனவே யோகம் என்பது, நாம் வாழும் முறையை, வாழ்க்கையை, இன்பத்தை முறைப்படுத்திக்கொண்டு, அறநெறியோடு வாழ்கின்ற வழிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இந்தக்காலத்தில், அந்தக்கால சாமியார்களை உதாரணமாகச் சொல்லி, யோகத்தில் இணையாமல் இருப்பதும் முறையில்லை. யோகத்தில் இருந்தாலும் கூட, வழக்கமான உலக கடமைகளில் தவறாது, உழைத்து, பொருளீட்டி வாழ்வதில் தவறு ஒன்றுமில்லை. (இந்தக்கருத்துக்கு பலநூறு எதிர் பின்னூட்டங்கள் வரலாம்)
ஊருக்கும், உலகுக்கும் பாரமாக, மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதற்கு பதிலாக, தானாக உழைத்து பொருள் சம்பாதித்து, ஏழைக்கும், பொருளீட்ட முடியாதோர்க்கும், இப்படி பேசுபவர்களிடம்கூட கொடுத்து உதவி வாழலாமே!
எனவே யோகம் என்றால் வாழும் நெறியை கற்றுக்கொள்வதுதானே தவிர வேறு அர்த்தம் ஏதுமில்லை என்று அவர்களிடம் நீங்களே சொல்லி விளக்குங்கள்!
வாழ்க வளமுடன்.