How connect with loved one who died, and I need Vallalar too?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
1. சுவாமிஜி! நாம் அதிகம் விரும்பியவர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய உயிர் நம்மோடு இணைய என்னென்ன செய்ய வேண்டும்?
2. வள்ளலாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் உயிர் என்னிடம் இணைய முடியுமா?
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். யாரிடம் ஒத்த பதிவுகள் உள்ளனவோ அவர்களிடம் இறந்தவர்களுடைய உயிர் தானாகவே இணைந்து கொள்ளும்.
உங்கள் உயிரைவிட வள்ளலார் உயிர் சிறந்த நுட்பம் வாய்ந்தது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது போல் இன்னும் 1000 பேர் 10,000 பேர் ஏற்றுக் கொள்ள விருப்பமுற்று முயன்று கொண்டிருப்பர்.
எந்த உயிர் பொருந்துமோ, எந்த உயிரின் அறிவு பொருந்துமோ அவ்வுயிருடந்தான் அவரின் உயிர் இணையும். விரும்புகிற எல்லோருடைய உயிரோடும் இணைய முடியாது. எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் – இயல்பூக்க நியதியின்படி – அவருடைய அறிவைப் பெறலாம்.
வாழ்க வளமுடன்.
-
அருட்பிரகாச வள்ளலார், வேதாத்திரி மகரிஷியோடு தன்னை இணைத்துக்கொண்ட அந்த நிகழ்வை பார்க்கலாமா?! குண்டலினி யோகம் கற்று, அதன் சிந்தனையிலேயே அன்றாடம் வாழ்ந்து, குறிப்புக்களை பதிந்துகொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள தன் வீட்டுத்திண்ணையில் படுத்திறங்கியுள்ளார். அந்த நாள் ஒரு பூரண சந்திரநாள் அதாவது பௌர்ணமி தினம். அந்த திண்ணைக்கு அருகே ஒரு பிரகாசமான ஒளி மிதந்து தெரிந்து கண்டு வியப்பில் ஆழ்ந்தார் வேதாத்திரி மகரிஷி. திடீரென்று அவருக்கு நா எழவில்லை, பேசவும், அசையவும் வழியின்றி அமைதியாக இருந்தார். வந்திருப்பது அருட்பிரகாச வள்ளலார் என்பதையும் உணர்வால் அறிந்துகொண்டார்.
‘நான் உன்னோடு பத்தாண்டுகள் இருக்கிறேனப்பா! இப்போது இதை யாரிடமும் சொல்லாதே’ என்று அருட்பிரகாச வள்ளலாரின் குரலாக, வேதாத்திரி மகரிஷிக்குள் ஒலித்தது.
அந்த நிகழ்வுக்குபிறகும் அந்த நாளுக்குப்பிறகும் பத்து ஆண்டுகள், தன் ஆராய்ச்சிக்கு விடைதரும் விதமாக, பலநூறு கவிதைகளை எழுதிக்கொண்டே வந்தார். அந்தக்கவிதைகள். ஞானக்களஞ்சியம் நூலிலும் பதிக்கப்பட்டது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த நிகழ்வை, தன் குரலால் சொல்லியும் உள்ளார். தன் வாழ்க்கை விளக்க நூலிலும் எழுதியுள்ளார். அன்பர்கள் கேட்டு, படித்து உண்மை அறிக, உணர்வில் தெளிக!
வாழ்க வளமுடன்!