Why do you have to look for pleasure in living?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வதில் ஏன் இன்பத்தை தேடவேண்டியது இருக்கிறது?!
பதில்:
இன்பம் என்பதை மகிழ்போகம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். ஆனால் போகம் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் சிதைந்துவிட்டது என்பது உண்மை. போகம் என்றால் ஆணும் பெண்ணும் கூடிக்கலத்தல் என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே மகிழ்போகம் என்று சொன்னாலும், அதைத்தான் அர்த்தம் கொள்வார்கள்.
சித்தர்கள் சொன்ன விளக்கத்தின் வழியாக, மகிழ்போகம் என்றால், மனிதன் தன்னுடைய புலன்களால் அனுபவிக்கின்ற, உணர்கின்ற இன்பத்தைத்தான் குறிப்பாக தருகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஐம்புலன்களை தாண்டி இந்த உலக இன்பங்கள் என்ன அனுபவித்துவிடப்போகிறோம்? எல்லாமே நம் புலன்களுக்குள்ளாக அடங்கிவிடுகிறது. ஆனால் தன்னை அறிந்துகொண்டால், அதுதான் நிலையான இன்பம், பேரின்பம் என்ற உண்மையும் நமக்கு விளங்குவிடும் என்கிறார்.
ஆனால் நாம் வாழ்வில் இன்பத்தை தேடுகிறோம் என்பது உண்மைதான். ஏனென்றால், நமக்கு எது இன்பம் என்பதை உணர்தலாக பெறவில்லை. அந்த இன்பம் எங்கே இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவில்லை. அதனால்தான் நாம் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். மேலும் அந்த இன்பத்தை பெற்றுவிட்டாலும் கூட, அதுதான் இன்பமா என்று தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் மிகையாக அனுபவித்து அல்லது குழப்ப நிலையில் அதை ஏற்று, அதன் வழியாகவே துன்பத்தையும் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.
இறையாற்றல், நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் இன்பத்தை வாரிவழங்குவது உண்மையே. எப்போது துன்பம் வந்தாலும்கூட அதை தாங்கும் அளவிற்கு, நமக்கு துணை நிற்பது கூட இறையாற்றல்தான் என்பதை நாம் அறிவதில்லை. சிந்தனையாற்றல் மிகுந்த நாம், எது இன்பம்? அந்த இன்பம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அளவு முறையோடு அனுபவிப்பது? என்பதை அறிந்துகொள்ளமுடியும், ஏற்று செயல்படுத்திடவும் முடியும். ஆனால் இந்த உலகில் நாம் அதற்கு இடம் கொடுக்காமல், தேடிக்கொண்டே காலத்தை வீண் செய்கிறோம். வேதாத்திரி மகரிசி, ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்றும் சொல்லுகிறார்! உங்கள் வசதி எப்படி?!
வாழ்க வளமுடன்.