Keep mind calm, no need meditation. Is it correct? | CJ

Keep mind calm, no need meditation. Is it correct?

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.