Home » writing letters » How we can understand the Vettaveli and Suthaveli, what mentioned by Tamil Siddhars?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லுகின்ற வெட்டவெளி மற்றும் சுத்தவெளி என்பதை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கம் கிடைக்குமா?
பதில்:
இயற்கையையும், அதனோடு கலந்து காத்து நிற்கும் ஓர் உயர்ந்த ஆற்றலை அறிந்துகொள்ள ஆராய்ந்த, தமிழ்நாட்டு சித்தர்கள், யோகத்தின் வழியாக பல்லாண்டுகாலம் முயன்று, உண்மையை உணர்ந்து கொண்டார்கள். அந்த வழியில் தான், ‘நான் யார்?’ என்ற உண்மையையும் கண்டுகொண்டார்கள். பஞ்சபூத தத்துவத்தையும், அதில் முதன்மையான ‘ஆகாஷ் என்ற விண்’ என்பதுதான், சித்து என்ற உயிராகவும் ஜீவன்களிடத்தில் இருப்பதையும் அறிந்துகொண்டார்கள். சித்து என்ற உயிரை அறிந்ததால்தான் அவர்கள் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ‘நான் யார்?’ என்ற தத்துவத்தின் முடிவாகவே, பேராற்றலும், பேரறிவுமான தெய்வீகம் என்ற இறையை வெட்டவெளியாக கண்டார்கள். அதுவே சுத்தவெளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வெட்டவெளி மற்றும் சுத்தவெளி இரண்டையுமே, வெற்று வார்த்தைகளாலும், பேச்சாலும், எழுத்தாலும் புரியவைத்திட முடியாது. அதில் தோல்வியே கிடைக்கும். உணர்வுப்பூர்வமாக இருக்கும் ஒன்றை எடுத்துச்சொல்லுவது என்பது மிக கடினம்.
அப்படி சொல்லமுடியாத என்றால் அது பொய்தானே? என்று பகுத்தறிவுவாதிகள் கேட்பார்கள். பகுத்தறிவும் தகுதியுள்ளவர்கள், உண்மையிலேயே என்ன என்று பகுத்துத்தானே அறியவேண்டும்? அதைவிட்டுவிட்டு, இருப்பதையே இல்லை என்று மறுத்துவிட்டால் அது ‘பகுத்தறிவு நிலை’ ஆகுமா? அத்தகைய பகுத்தறிவு நிலைதான் யோகத்தில் நாம் கற்கிறோம். ஆனால் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்.
ஏன் சொல்லவோ, எழுதவோ முடியாது? என்பதை பார்க்கலாமா? ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள், இப்போது அதன் சுவை என்ன? என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் இரண்டாவதாக காகிதத்தில் எழுதிவிடுங்கள். அடுத்து, கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் மூன்றாவதாக காகித்தில் எழுதிக்கொள்ளுங்கள். இறுதியாக ஒரு அன்னாசிப்பழத்தையும் சாப்பிட்டு விடுங்கள். அதனுடைய சுவையையும் முடிவாக காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். என்ன எழுதியிருப்பீர்கள்? என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இப்பொழுது, அந்த காகிதத்தில் எழுதிய சுவையை வாசித்துப் பாருங்கள். இந்த நான்கு சுவைகளும் ஒன்றா? பலவா? அதை அப்படியே உங்களுக்கு எதிரில் இருக்கும் நபருக்கு, புரியவைத்திட முடியுமா? முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் உணர்ந்த அந்த சுவையை அப்படியே, அதேபோலவே, அந்த நபருக்கு விளக்கம் தந்து உணரவைக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அது உங்களால் முடியுமா? ஒருவேளை உங்களால் மட்டுமே முடியுமா?
பகுத்தறிவுவாதிகள் எப்போதுமே அடையாளம் காட்டும், சயின்ஸ் என்ற விஞ்ஞானிகள், சுத்தவெளி மற்றும் வெட்டவெளியை மட்டுமல்ல, பூமியின் உயரே, குறைந்தபட்சமாக 80 கிலோ மீட்டருக்கு மேலே, ஏதுமில்லை. ஒன்றுமற்ற இருட்டுத்தான் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரை, அது ஒன்றுமில்லை, ஏதுமில்லை என்பதுதான். அதனால் நாமும் அப்படியே நினைத்து ஏற்றுக்கொள்ளலாமா?
இத்தகைய விஞ்ஞானிகள்தான் ‘அணுவை பிளக்கவே முடியாது’ என்றார்கள். பிறகு நடந்தது என்ன? என்றாலும் இன்னமும் அது, அடுத்து நகரமுடியாமல், மூன்று தன்மைகள் கொண்ட குவார்க்குகளோடு நிற்கிறது.
சரி, வேதாத்திரி மகரிஷி ஒரு கேள்வி கேட்கிறார். ‘இந்த பூமியும், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும் எப்படி மிதக்கின்றன? யார் தாங்கி நிற்கிறார்கள்? மிதக்கும் பொருள் வலு உடையதா? தாங்கும் பொருள் வலு உடையதா?’
இந்த கேள்விக்கு, நீங்களும் பதில் தர முயற்சியுங்கள்.
வாழ்க வளமுடன்
-