How to counter the general notion that devotion and spirituality deceive people?
பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?
பதில்:
உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!
பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.
ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.
இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.
இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.
வாழ்க வளமுடன்.
-