What is Gnana in Tamil? How to get it?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஞானம் என்பது என்ன? அதை எப்படி பெறுவது?
பதில்:
ஞானம் பெறுதல் எப்படி என்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை? எது எனக்கு வேண்டும்? எதில் நான் உயர்வடைய வேண்டும்? என்ற நோக்கமும், சிந்தனையும் வேண்டும். அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். மனம் ஒருமுகம் என்று கூட சொல்லலாம். அத்தகைய ஞானம் என்பதை குண்டலினி யோகத்தின் வழியாக பெறுவது ஒருவகை. வேறு சில வாழ்க்கைக்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு உதவம் கலைகள், பயிற்சிகள் வழியாகவும் பெறலாம் என்பதே உண்மை.
ஞானம் அடைந்தால் மோட்சம், முக்தி, அப்படி இப்படி என்ற கதைதான் இங்கே உலவுகிறது. ஞானம் ஒரு தனித்துவமான, சக்தியை வழங்குகின்ற, சக்தியை பெற்றுக்கொள்கின்ற நிலை அல்ல என்பதை முதலில் தெளிவு செய்து கொள்க. ஞானம் என்பது உங்கள் அனுபவத்தில், வளர்ச்சியில், ஆராய்ச்சியில், காலத்தால் பெறக்கூடிய ஒரு நிலைதான். அந்த நிலையை அடைந்தவர்களை, அதாவது ஞானத்தில் நிலை பெற்றவர்களை, ஞானி என்று அழைக்கின்றோம் அல்லது அழைக்கப்படுகிறார்கள்.
ஞானம் என்றால், உண்மையை அறிந்த நிலை என்று அர்த்தமாகும். இறைஞானம் என்றால், இறை என்ற உண்மையை அறிந்துகொண்ட நிலை என்று பொருளாகிறது. கேள்விஞானம் என்றால் கூட, கேள்விகளாக சிந்தித்து, உண்மையை அறியக்கூடிய தன்மை அல்லது நிலை என்று பொருளாகும். ஞானம் என்பது, அக்காலம் முதல் இக்காலம் வரை, உணமை அறியாதோரால் கட்டமைக்கப்படும் அதிசயமானது ஒன்றல்ல.
முக்கியமாக, வெற்று வார்த்தைகளால் விளங்கிக் கொள்வது ஞானம் அல்ல. மனப்பூர்வமாக, மனமே மலர்ந்து, விரிந்து, இறையுண்மையில் திளைத்த நிலையில் உங்களுக்கு கிடைப்பதுதான் ஞானம். ஒருவேளை உங்களுக்கு வார்த்தையில் கிடைத்தாலும், அந்த உண்மை தன்மை நோக்கி நகர்ந்து அதை உணரவேண்டும்.
குண்டலினி யோகத்தின் வழியாக நாம் பெறுகின்ற ஞானம், இறை ஞானம் ஆகும். இதற்கு தகுந்த குருவின் வழிகாட்டல் வேண்டும், அவர்மூலமாக தீட்சையும், தவசாதனையும் பெற்று கற்றுத்தேரவேண்டும். நம்முடைய முயற்சி, பயிற்சி, ஆர்வம், ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக, ஞானம் பெறுதல் கைகூடும்.
வாழ்க வளமுடன்.