How shanti meditation works? is it okay to store the kundalini there? | CJ

How shanti meditation works? is it okay to store the kundalini there?

How shanti meditation works? is it okay to store the kundalini there?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் மறுபடி கொண்டு செல்வது நல்லதா? அப்படியானால் சாந்தி தவம் எப்படி வேலைசெய்கிறது?


பதில்:

நல்ல புரிதலுக்கான கேள்வி இது. நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்டால் உங்களுக்கு, குருவால் தீட்சை தரப்படும். சில யோக அமைப்புக்களில் குண்டலினி தீட்சை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. நீங்களாகவே உயர்த்திக்கொள்ளவோ, தானாகவே எழும்படி செய்யவோதான் பயிற்சி தரப்படுகிறது. இதற்கு கொஞ்சம் காலமும், முயற்சியும் ஆகலாம். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், மனவளக்கலை மிக எளிமையான யோகமுறை ஆகும். உயர்ந்த குருவால், பயிற்சி பெற்ற ஆசிரியரால், தொட்டுத்தரும் தீட்சை மூலமாக, குண்டலினி சக்தி, ஆக்கினை சக்கர மையத்திற்கு உயர்த்தப்படுகிறது. உடனடியாக நாம் அதை உணர்ந்து, தவம் இயற்றவும் முடியும்.

ஆர்வமும், முயற்சியும், ஏற்கனவே பக்தியில் ஈடுபாடு உள்ளோர்க்கும், ஆக்கினையில் தவம் இயற்றிவர, மூன்று நாட்களுக்குள் நல்ல ஆற்றல் பெருகிவரக் காணலாம். ஆனாலும் ஒருவாரம் ஆக்கினையில் இருப்பது நல்லதே. தவ ஆற்றல் ஆக்கினையில் பெருகிவிட்டால், ஆரம்பகாலத்தில், அதாவது தவம் புதிதாக கற்றுக்கொண்ட நிலையில் உள்ளவர்களுக்கு, தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு வரும். இது இயல்பு. அந்தநிலையில், அவர்களுக்கு உண்டாகிய தவ ஆற்றலை, குறைக்கவேண்டும். அதற்காகவே, சாந்தி தவம் என்ற முறை இருக்கிறது. மிக நீண்டகாலமாக இத்தவம் இல்லை. ஆனால், சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, மகரிஷியின் காலத்தில், நடைமுறைக்கு வந்துவிட்டது.

சாந்தி தவம் என்பது, ஆக்கினையில் நின்றிருக்கும் குண்டலினி சக்தியை, மீண்டும் மூலாதார சக்கர மையத்திற்கு கொண்டு வருவதாகும். இது வாரம் ஒருநாளில், வெள்ளிக்கிழமையில் செய்வதுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இங்கேதான் உங்கள் சந்தேகம் எழுகிறது. எழுப்பிய, உயர்த்திய குண்டலினி சக்தியை, மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டுவந்தால் என்ன ஆகும்? 

அதீத தவ ஆற்றலை, சக்தியை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தன்மை அங்கேதான் கிடைக்கிறது. அதனால்தான் குண்டலினியின் இடத்தை மாற்றி அமைக்கிறோம். எனவே இது நல்லதுதான். மேலும் முக்கியமாக, ஒருவரது வாழ்வில், ஒருமுறை எழுப்பி, உயர்த்தப்பட்ட குண்டலினி மீண்டும் அடங்கிவிடாது. எப்போதும் தவம் பழகப்பழக, தானாக எழுந்து உயர்ந்து, தவ நிலைகளில் நம்மோடு, நம் விருப்பத்திற்கு துணை நிற்கும் என்பதே உண்மை ஆகும்.

வாழ்க வளமுடன்.