Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places? | CJ

Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places?

Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறந்த வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்யலாம் என்றும் நல்ல சக்தி ஊட்டம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார்களே? இது சரியா?


பதில்:

திறந்த வெளியில், எல்லோரும் கூடி உடற்பயிற்சி செய்வதையும், சிலர் கூடி வழிபாடு செய்வதையும் கண்டு அப்படியான முடிவுக்கு வந்திருக்கலாம். ஏதாவது ஒருநாள், ஒரு சிறப்பு விழா, கொண்டாட்ட, நிகழ்வுகளில் பலர் கூடி அப்படி செய்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதே அந்தமாதிரியான நிகழ்ச்சியாகும். இந்த உண்மையை, அதை நிகழ்த்தியோரும், அமைப்பும் தெரிந்தேதான் செய்வார்கள்.

ஆனால், யோகத்தில், அதுவும் மனவளக்கலை யோகத்தில் இணைந்திருக்கிற நாம், திறந்தவெளியில் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு நேரத்திலும், அது அதிகாலையோ, பகலோ, மாலை நேரமோ செய்யவேண்டாம் என்பதே கருத்தாக இருக்கிறது. பெரும்பாலும், கூரை, சுவர்களற்ற திறந்த வெளியில், காற்றின் போக்கு அதிகம் இருக்கும். வெப்பதட்ப தாக்குதல் அதிகம் இருக்கும். அந்த இடங்களை சுற்றி எழும் ஒலிமாசு உங்கள் காதுகளை பாதிக்கும். ஏதேனும் சில பூச்சி, பறவை, விலங்கு இனங்கள் தாக்கம் இருக்கும். அவைகள் உங்களை தொந்தரவு தருபவராக நினைக்கவும் கூடும். இவை எல்லாமே உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத சூழலை தருவதாக அமைந்திருக்கும். அங்கே எழும் தூசி, அதன் தன்மை, கெடுதியான வாசனை ஆகியனவும் பாதிப்பு தரும்.

மேலும் முக்கியமாக, உடல், மனம் இவற்றின் இயல்பான சக்தியை உறிஞ்சி எடுக்கும் தன்மை அங்கே இருக்கக்காணலாம். இது வெகு சீக்கிரமாக உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். சக்தி இழப்பை ஏற்படுத்தும். தவத்தில் தடைகளை உண்டாக்கும். திறந்தவெளி என்பதால், பலவித தேவையில்லாத சக்தி இழப்பு உடனடியாக தாக்கும். இவை உங்கள் உடலை மட்டுமல்ல, மனதையும் பலவகையில் பாதிக்கும், குழப்பத்தை உருவாக்கும். என்னதான் இடத்தூய்மை, மனத்தூய்மை, அருட்காப்பு இட்டுக்கொண்டாலும் கூட, நன்மை தராது என்பதே உண்மை.

எனவே நிச்சயமாகவே, வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்த்து விடுங்கள். மேற்கூரை, தடுப்பு சுவர்கள் கொண்ட இடம், அறை தேவை என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மனவளக்கலை யோக பயணத்தில் தடையின்றி பயணம் செய்து உயருங்கள்.

வாழ்க வளமுடன்.