Why all are advice to worship the Ancestors Worship Temple?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்!
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். நன்மை பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே? அதில் உண்மை உள்ளதா?
பதில்:
பக்தி வழியில், மக்களை மேன்மை அடையச் செய்வதற்காக சொல்லப்படும் வழிமுறைதான் இது. தனியாக குறிப்பிடும் வகையில் சில உள் அர்த்தம் இதில் உண்டு எனினும், அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் நன்மை பிறந்துவிடுவதில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
குலதெய்வம் என்பது என்ன? ஆதிகாலம் முதல், நம் குடும்பத்தின் முன்னோர்கள் பக்தி வழியில் வழிபட்டு, வழிபாடு செய்து வந்த நிலையில் இருக்கும், தெய்வம் எனலாம். நாமும் சிறுவயதில் இருந்து அச்சடங்குகளை பார்த்து, வணங்கி வந்ததால் நமக்கும் இதில் ஏற்பு உண்டாகிவிடும். முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தையே நானும் வணங்குகிறேன் என்ற சிறப்பும் அங்கே இருக்கிறது தானே?!
ஆனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக, எத்தனையோ தலைமுறையாக வந்த பக்தி, கனிந்து யோகமாக மாறவில்லையே?! பக்தி என்பது குறிப்பிட்ட விளக்கமுடியாத எல்லைகளைக் கொண்டது. ஆனால் யோகம் என்பது முழுமையானது, விரிவானது, உண்மையானது ஆகும். பக்தியில் இருப்பவர்களுக்கு, யோகம் தேவையில்லை என்ற கருத்துத்தான், பொதுவாக இங்கே பரவியிருக்கிறது.
வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுதான் எனினும், அவ்வழியில் நாம் பெற்ற, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்ப்பதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகள் என்ன? என்று கேட்டால் ஒன்றுமில்லையே! இத்தனை காலமாக, நாம் பிறந்ததின் பிறவிக்கடனை மறந்துவிட்டு அல்லவா, பக்தியில் திளைக்கிறோம். உண்மையிலேயே, நம் முன்னோர்களுக்காக, அவர்களின் ஆன்ம சாந்திக்காக, கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதற்காக நாம் ஏதேனும் முயற்சி செய்தோமா?
அவர்களைப்போலவே, இன்னமும் பக்தியில் தானே நின்றிருக்கிறோம்? இந்த இடத்தில்தான் யோகத்தின் உண்மை உணர்ந்து, யோகத்தில் இணைத்துக்கொண்டு, இதுவரை முன்னோர்களின் வழியாக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவை தீர்த்து, தன்னுடைய களங்கத்தையும் போக்கிக்கொண்டால், நாம் வாழும் வாழ்க்கை இனிதாகும். இனி நமக்கு வரக்கூடிய சந்ததியினரின் வாழ்க்கையும் இனிதாகும் அல்லவா?
அதற்கு நாம் முயற்சிக்க வேண்டாமா? இன்னமும் பக்தியோடு நின்றிருப்பது நல்லதுதானா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.