How the Thuriyatheetha meditation set as a highest ? | CJ

How the Thuriyatheetha meditation set as a highest ?

How the Thuriyatheetha meditation set as a highest ?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் துரியாதீத தவம் உயர்வானது எப்படி? வேறுதவம் இல்லையா?!


பதில்:

பல ஆயிரமாண்டு கால, யோக வரலாற்றில், சஸ்ரதாரா என்ற ஆயிரத்தெட்டு இதழ் தாமரை பெயர் கொண்ட, தலை உச்சி நிலையான, துரியம் என்ற ஆதாரமைய தவமே உயர்நிலை தவம் என்று இருந்தது. ஏறக்குறைய இப்போதும் அப்படித்தான் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலான யோக மையங்களில், துரிய தவத்திற்கு மேல்நிலையாக எந்த தவமும் இல்லை. மனவளக்கலை வழியாக மட்டுமே, ஏற்கனவே உயர் நிலையாக இருந்த துரியத்திற்கும் அடுத்ததாக உச்ச நிலை தவமாக, துரியாதீதம் என்ற தவம் வழங்கப்படுகிறது! பெயரிலேயே, துரியம் அதீதம் என்ற பெயர் பெற்றுள்ளதையும் கவனியுங்கள்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் இறையுணர்தல் வழியில், பல ஆண்டுகளாக, துரியதவம் இயற்றிவந்துள்ளார். எனினும் அவர் அதில் நிறைவடையாத தன்மையை உணர்ந்திருக்கிறார். துரியம் என்ற நிலைக்கு அப்பாலும் கூட மனம் விரிந்து நிற்பதையும், மேலும் மேலும் அதனிலும் விரிவதையும் கண்டு உணர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்து, தன்னோடு யோகத்தில் பயணித்த சிலரிடம் கேட்டு கலந்தாலோசித்த பொழுது, அவர்கள், துரியத்திற்கு மேல் எதுவுமில்லை என்றே மறுத்துள்ளனர்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தொடர்ந்து, அந்த மனவிரிவை கவனித்து, முடிவான உண்மையில், பேராற்றலும் பேரறறிவுமான, சித்தர்கள் சொன்ன வெட்டவெளியில், சுத்தவெளியில் முழுமையடைவதை உணர்ந்தார். அதன்பிறகே மனம் தன் உண்மைநிலையை, அடித்தளமான நிலையையும் அடைந்ததை அறிந்துகொண்டார். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் தர எண்ணியே, தவமாக வடிவமைத்தார். அந்த தவமே துரியாதீதம் ஆகும். 

எனவே துரியாதீதத்திற்கு உயர்வான தவம் என்ற நிலை பொருத்தமானதே ஆகும். இதற்கு நிகராக வேறெந்த தவநிலையையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.

வாழ்க வளமுடன்.