Is the curse true? Explain how much impact it can have?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சாபம் என்பது உண்மையா? அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குக?!
பதில்:
மன இதனாகிய மனிதர்கள், தங்களை இந்த இயற்கையோடு முரண்பட்டு, தனித்தும், தன்முனைப்போடும் செயல்படும் பொழுது தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறான். அந்நிலையில் அவன் பாவத்தை செய்கிறான். இந்த பாவம் என்றால், அறமில்லாத செயல் என்பதைத்தவிர வேறு அர்த்தமோ, கற்பனைகளோ செய்துகொள்ளக்கூடாது. அது அடுத்தவருக்கு மட்டுமல்ல, தனக்குத்தானாகவும் செய்து சிக்கிக் கொள்கிறான். சாபம் என்ற நிலை, பொறாமையினாலும், வருத்ததினாலும் உண்டாவதாக சொல்லலாம்.
ஒரு மனிதர் உங்களை, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினால், அந்த நேரத்தில் அதை தடுக்கமுடியாமல், ஏற்றுக்கொள்ளும் சூழலில், வருத்தம் மேலிட துன்பம் விளைவித்த அந்த நபருக்கு சாபம் தருவதாக சொல்லலாம். சினம், வஞ்சம் ஆகியற்றின் அடக்கப்பட்ட குணமே சாபமாகவும் வெளிப்படுகிறது. முக்கியமாக, துன்பம் நமக்கு வருகிறது என்றால் அதற்கான, காரணங்களை நாம் ஆராய்ந்து பழகி, உண்மை உணர்ந்து கொண்டால் தேவையின்றி, நாம் யாருக்கும் சாபம் தரவேண்டியதில்லை. அதுபோல நாமும் பிறருக்கு எச்செயல் செய்தாலும், அதில் நன்மை விளைவதை முக்கியமாக்கொண்டா செய்யவேண்டும். இதனால் பிறருக்கும், துன்பமோ, வருத்தமோ விளையாத நிலை உண்டாகும்.
மேலும் இந்த துன்பம், வருத்தம், சாபம் ஆகியன கருமையத்திலும் பதிந்து, கர்மா என்ற வினைப்பதிவுகளாகவும் மாற்றம் பெறும். இத்தகைய நிலையில் மாற்றம் பெறவேண்டும் என்றேதான், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இரண்டொழுக்க பண்பாடை உருவாக்கி தந்துள்ளார். எந்த வகையிலும், தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியோடு தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அமைத்துகொள்ள வேண்டியது அவசியம்.
இந்த சாபம் என்ற நிலை, எங்கே எழுந்ததோ அந்த மனிதரையும், யாருக்கு தரப்பட்டதோ அவரையும் இணைத்தே பாதிப்பைப் தரக்கூடியது. மேலும், மனதோடும், நினைவோடும் தொடர்பு கொண்டது என்பதால் உடனடியாகவும் செயல்படக்கூடும். விளைவில் நன்மை தீமை என்பது, அவரவர் கர்ம வினைப்பதிவுகளின் சாரமாகவும் அமைந்துவிடும். எனவே நம்மை திருத்திக்கொண்டு, பிறரின் சூழல் அறிந்து, பொறுத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை, உதவி, சேவை என்ற வகையில் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், பிறரிடமிருந்தும் சாபம் எழுவதை தடுத்துக் கொள்ளலாம். சிந்தனையில் உயர்ந்து திருத்தம் கொள்க.
வாழ்க வளமுடன்.