Why I have not perfect in my job and financially yet?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, திறமை இருந்தும் கூட என் வேலையும் நிறைவில்லை, பணம், சம்பாத்தியம் பொருளாதரமும் நிறைவில்லை. காரணம் என்ன?
பதில்:
உலக வாழ்வியலில் நாம் முன்னேற, கல்வி படிப்பும், திறமையும் மிக அவசியம். வெறும் படிப்பு மட்டுமோ. திறமை மட்டுமே கொண்டு முன்னேறுகின்ற காலம் இப்போது இல்லை என்பது உண்மை. ஆனாலும், தனித்திறமையாளர்களுக்கு மதிப்பும், அதற்கான முன்னேற்றமும் உலகில் ஏற்றுக் கொள்ளப்படுவதை நாம் காணலாம். அதுபோலவே தனித்தொழில், வியாபாரம், சேவை வழியான உழைப்பிற்கும் நன்மதிப்பு உண்டு, வளர்ச்சியும் உண்டு. இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால், உடனடியாக பொருளாதார உயர்வினை பெற முடியாது. எனவே பொறுமையாக காத்திருக்கவேண்டும் என்பதே உண்மை.
நீங்கள், உங்கள் திறமை மற்றும் படிப்பின் நிலை குறித்து ஆராய்ந்து அதற்கான, அரசு, தனியார் வேலைகளில் இணைந்துகொள்ளுங்கள். மிகுந்த போட்டி இருப்பதால், தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைத்திடும் என்பதும் உண்மையே. உங்களை முடக்கும், திசை மாற்றும், அடிமைப்படுத்தும், அவமானப்படுத்தும் வேலைகளில் என்றுமே உங்களை ஈடுபடுத்தாதீர்கள். வெறுமனே பணத்திற்காக அப்படி வேலை பார்க்காதீர்கள். அது உங்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தாது.
தனியாக நீங்கள் பொருளாதார உயர்வு பெற விரும்பினால், மக்களுக்கு சேவையை கருத்திக் கொண்டு, அதன்படி வேலையை, வியாபாரத்தை, தொழிலை அமைத்துக்கொண்டால் மிகச்சிறப்பாக முன்னேறலாம். குறைந்தது மூன்று மாதங்கள் பொறுமையோடு செயல்வேகம் குறையாது உழைக்கவேண்டியது அவசியமாகும்.
இதை நீங்கள் நம்புவீர்களா என்பது தெரியாது. எனினும் விளக்கம் தர வேண்டியது, எங்கள் கடமை. உங்கள் எண்ணம், சொல், செயல் வழியாக, உங்களை அறியாமல், உங்கள் கர்மா என்ற வினைப்பதிவை விளைவாக்குகிறீர்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது எனலாம். இயற்கையின் வினைவிளைவு நீதியில் நீங்கள் தப்பிக்க முடியாது. எனவே உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் விழிப்புணர்வு கொண்டு, வரக்கூடிய விளைவை கவனித்து, தனக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடியதையே உங்கள் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை யோகமே தரும். யோகமில்லாமல், முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதில் நிலைக்கமுடியாது தடுமாற்றம் வரும். உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல நிறைசெல்வமும், உயர்புகழும் பெற வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன்.