If we have to join in yoga, we need to emptiness on our materialistic world? | CJ

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.