Is sangalpa and mantra working? Or is it deception?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?
பதில்:
இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!
நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.
சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!
வாழ்க வளமுடன்.