Can simplified exercise will solution for my all physical problems? | CJ

Can simplified exercise will solution for my all physical problems?

Can simplified exercise will solution for my all physical problems?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு சில உடல்பிரச்சனைகள் உள்ளது! வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் முழுமையாக தீர்வு கிடைத்துவிடுமா?


பதில்:

நமக்கு வரும் உடல் பிரச்சனைகள், தொந்தரவுகள் பெரும்பாலும் மனரீதியில் உருவானவையாகவே இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக நாம் கவலைப்பட்டால் கூட அது மனதையும் உடலையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கும். சினமும் அத்தகைய தன்மை கொண்டதே. ஆனால் பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையில் இருந்தால் அது ஆரம்ப நிலை என்று சொல்லலாம். அதுவே காலத்தால் நீண்டு, முற்றிப்போனால் அது, பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையை மீறி நோயாக மாறிவிடும். அந்தந்த உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இதனால் உங்களுக்கு இருப்பது, உடல் பிரச்சனைதானா? அல்லது நோயா? என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். இங்கே மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். பார்வைக்கு திடமாக இருக்கும் மனிதர்கள் பலர், நீண்டகால நோயை தன்வசம் பெற்றவராக இருப்பார் என்பதே நிகழ்கால உண்மை. மேலும் உடல் பருமனாக இருப்பது நல்லது என்றும், ஒல்லியாக இருப்பது நோய்தன்மை என்ற தவறான கணிப்பிலிருந்து மாறிவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி தந்த எளியமுறை உடற்பயிற்சி என்பது, உடலை, மனதை, உயிர் வளத்தை தக்கவைக்கவும், ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிடவும், உடலுக்குள்ளாக இயங்கும் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்தவோட்டம் ஆகிய சீராக பாய்ந்தோடவும், குறைவுபடாமல் இருக்கவும் உதவும் என்பதே உண்மையாகும். மேலும் நோய்தாக்கம் பெறாத விழிப்புணர்வும், தடுப்பு சக்தியும் தந்து காத்திடும்.

இங்கே ஏற்கனவே, உடலில் நோய் என்ற நிலை இருந்தால், அந்த நோய்தன்மையை கொஞ்சம் குறைத்திட வழி பிறக்குமே அன்றி, முழுதாக தீர்த்திட வழியில்லை. நோய் தன்மையை பொறுத்து, மருத்துவரின் வழிகாட்டலும், மருந்துகளும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இது உடற்பயிற்சி தானேதவிர, உடல் உறுப்புகளை திருத்திட, மாற்றி அமைக்க மருந்து அல்ல என்பதை புரிந்துகொள்க. அப்படியானால், ‘எளியமுறை உடற்பயிற்சி என்பது வீண் தானே?!’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், அது உங்களுடைய கருத்தேயன்றி உண்மையல்ல.

எப்போதுமே, வருமுன் காப்பதுதானே சிறப்பு, அதன்படி, நாம் இளமையில் நன்றாக இருக்கும்பொழுதே, அப்படி உணரும் பொழுதே, எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்தால், வாழும்நாள் வரையில், நோயின்றி சிறப்பாக வாழ வழியுண்டாகும். அதுதான் குருமகான் வேதாத்திரி மகரிஷி தந்த விளக்கமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.