What about the Summa Eru on the Self-Realization?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தவம் இயற்றாமல், வழிபாடும் செய்யாமல், மனதை புரிந்துகொண்டு, நாம் சும்மா இருந்தாலே இறையுணர்வு பெறலாம் என்று சொல்லுகிறார்களே?
பதில்:
ஆமாம் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இங்குமட்டுமல்ல, உலகெங்கும் அப்படி மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இது வேதாந்த கருத்தின் அடிப்படை எனலாம். இதில் எந்தக்குறையும் இல்லை. ஆனால் இதை நீங்கள் கடைபிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும், இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படியேதான் இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். ஏதோ பேச்சளவில், செயலளவில், நீங்கள் விழிப்பாக இருப்பதாக தோன்றுமே தவிர வேறெந்த மாற்றமும், அனுபவமும் தரப்போவதில்லை, பெறப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் அருகில் இருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கும் புரிதலுக்கும் இடையே ஒரு தடையும் இருக்கிறது. அத்தடையை நீங்கள் காண்பதே இல்லை.
இதன்வழியே மனமும், உடலும், அடிப்படை குணாதசியங்களும் மாற்றம் பெறுவது மிக கடினம். ஒரு வெளித்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவேண்டுமானால் நம்பலாம். உடலும் தன்னை நோய் திருத்தம், தாக்கம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றுவிடுவதில்லை.
மேலும் இதன் வழியாக நீங்கள் ஒரு குழப்பத்திலிருந்து, விடுபட்டுவிட்டேன் என்று நம்புகிறீர்கள் அல்லது பழகிக் கொள்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறவில்லை. உங்கள் கர்மா என்ற வினைப்பதிவு, உங்கள் எண்ணம், சொல், செயல் திருத்தம் பெறவில்லை. விளைவுகளும் உங்களுக்கு சாதகமாக எழப்போவதில்லை. ஆனால் நீங்கள் இறையுணர்வு பெற்றுவிட்டதாகவும், இறையுணர்வில் இருப்பதாகவும் நம்புகிறீர்கள். உங்களைப்பொறுத்தவரை அது சரிதான். இங்கே எந்த வாதத்திற்கும் இடமில்லை. ஏனென்றால் புரிதலில் குழப்பமும், நிலைமாறுதலும் அமைந்திருக்கிறதே?!
உங்கள் கையில் இருக்கும், மாதுளம்பழம் நன்கு சிவந்து அழகாக இருக்கிறது. எப்படியும் உள்ளே இருக்கும் விதைகள் சுவையாக இருக்கும், நல்ல இனிப்பைத்தரும். பிழிந்தால் நன்கு பழச்சாறாகவும் கிடைக்கும், இந்த மரம் எந்த விதையின் அடிப்படை கொண்டது தெரியுமா? இதன் தாய் மரம், இந்த நாட்டைச் சார்ந்தது, அந்த நாட்டின் மண் எப்படி வளம் கொண்டது தெரியுமா? என்று இப்படி பலவாறாக சொல்லி மகிழலாம், பிறருக்கும் புரியவைக்கலாம். ஆனால் அந்த மாதுளம்பழத்தை, வெட்டி பிரித்து, அதன் விதைகளை தனியே பிரித்தெடுத்து, சாப்பிட்டுப் பார்த்தால்தானே உண்மைச்சுவை அறியமுடியும்?! ஆனால், ‘என்னய்யா பெரிய மாதுளம்பழம்? நான் சாப்பிடாத மாதுளம்பழமா? இதுவரைக்கும் எத்தனையோ பழம் சாப்பிட்டிருக்கேன். அதுபோலத்தான் இதுவும் இருக்கும்’ என்று பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?
குண்டலினி யோகம் என்பது குருவால், நான் யார்? என்ற கேள்வியில் ஆரம்பித்து, உணர்ந்து அனுபவித்து, தன்னை அறிவதும், இறையுணர்வு பெறுவதுமாகும்! அந்த நிலையில்தான் ரமணமகரிஷி சொல்லிச்சென்ற ‘சும்மா இரு’ என்பது உண்மையாகும்!
வாழ்க வளமுடன்.