Why does this mind make me suffer this? How to calm it down?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த மனம் ஏன் என்னை இந்த படாதபாடுபடுத்துகிறது? அதை எப்படி அமைதிபடுத்துவது?
பதில்:
மிக நல்லதுதான், ஒருவகையில் மனம் என்பதை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே?! சரி இந்த மனம் என்பது என்ன? நாம் வேறு மனம் வேறா? என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே அப்படித்தான் சொல்லி, விளக்கமும் கொடுத்து, அதை அடக்கு, விலக்கு, ஆளுமை செய் என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறார்கள். ஆனால் முடிகிறதா?
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனிதனும், மனமும் ஒன்றே என்று சொல்லுகிறார். எப்படி? மனம் இதனானவன் மனிதன். மனதையும், மனிதனையும் பிரித்திட முடியாது என்கிறார். ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் அனுபவங்களைக் கொண்டும், பிறர் நமக்கு தருகின்ற, தகவல்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞான முடிவுகள் கொண்டும் அப்படி பிரித்து நினைத்துக் கொண்டு, புதிய ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறோம். மனம் நம்மோடு பிறந்தது, நம்மோடு பிரிவது, நம்மோடு வாழ்வதும் கூட. எனவே மனதை அடக்க நினைக்காது, அறியவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
மனம், நம்முடைய உடலெங்கும் ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய, உயிராற்றலின் படர்க்கை ஆற்றல் என்ற உண்மையையும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மனம் என்பது அலை இயக்கமும் கூட. இதை தற்கால விஞ்ஞானிகள் பதிவு செய்தும் காட்டுகிறார்கள். மேலும் மனம் என்பதை, மூளையின் அலை இயக்க செயல்பாடு என்றும் விளக்கம் தருகிறார்கள். அதுஒருபக்கம் இருக்கட்டும். நீங்களும், மனமும் ஒன்றே என்பதை முதலில் புரிந்துகொள்க.
இங்கே ஏன் படாதபாடுபடுத்துகிறது என்று கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. தனக்குள்ளாக ஏற்கனவே பதிவாக வைத்திருக்கும், கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கமே ஆகும். அது அவ்வப்பொழுது நம்முடைய எண்ணம், சொல்,செயலால் வெளிவருகிறது. சூழ்நிலை தாக்கம் இருந்தால், தானாகவும் வெளிவரும். அது எப்படி நமக்குள் இருக்கிறது என்றால், வழிவழியாக, பரம்பரையாக, நம் முன்னோர்கள் வழியாக, நம் பெற்றோருக்கு வந்து, பெற்றோரிடம் இருந்து நமக்கும் வந்துவிட்டது. இதை நாம் புரிந்து சரிசெய்துகொள்ளவும், தீர்க்கவும் வேண்டும். இல்லையேல் இது, நம் வழியாக, நம்முடைய குழந்தைகளுக்கும் தொடரும். இதுதான் இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.
மனதை அமைதிப்படுத்த, அந்த மனதையே ஆராயவேண்டும், அந்த ஆராய்ச்சியில் இறங்கிட யோகத்திற்கு வரவேண்டும். தகுந்த குருவால், அவரின் வழிகாட்டலுடன் நாம் அமைதியும், முழுமையும் அடையலாம். வாழ்நாளை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றலாம்! அந்த மாற்றத்தை பெற உங்களை வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.