Why we are living anytime with love and attraction? | CJ

Why we are living anytime with love and attraction?

Why we are living anytime with love and attraction?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது ஏன்?


பதில்:

அதுதான் இயற்கை. இதில், இந்த ஆணுக்கு பெண்மேல் ஈர்ப்பு, பெண்ணுக்கு ஆண்மேல் ஈர்ப்பு என்பது அவர்வர்களின் தவறு என்று வருந்த வேண்டியதில்லை. ஆனால் அதை முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் வாழும் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால்தான் முன்னோர்கள், அறிஞர்கள், வாழும் மக்கள் நலம்காப்போர், தகுந்த காலம் வரை காத்திருக்கவும், தகுந்த துணை தேடி, திருமணம் என்ற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற நலம் சார்ந்து வாழவும், அவர்கள் குழந்தை பெற்று, காத்து வளர்த்து ஆளாக்கிடவும், வழிவகை செய்துவைத்தார்கள்.

உண்மையிலேயே, நம் பிறப்பே பாலுறவின் தீர்வு தானே? நம் பெற்றோரின் நிறைவான இன்பத்தின் வழியாகத்தானே நாம் இந்த உலகில் பிறந்தோம். அதனாலேயே அதன்பால் ஈர்ப்பு வருவது இயல்பு என்றுதான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் விளக்கிடும் பொழுது, கருவாக இருந்து, இந்த உடல் கட்டப்படுவதற்கு, வித்துநாதமும், அதன் ஆற்றலுமே செலவாகிறது. அந்த கட்டமைப்பில் முழுமை வந்துவிட்டால், ஆண் பெண் பருவ வயதிற்கு வந்துவிடுகிறார்கள். அதாவது தன்னைப்போல இன்னொரு உயிரை உருவாக்கிக் கொள்ளக் கூடிய தகுதியை, இயற்கை அவர்களுக்கு வழங்கிவிடுகிறது. மேலும் வித்துப்பையில் ஏற்படும் தேக்கம், பாலுறவு தூண்டுதலையும் ஏற்படுத்துகிறது.

இதனால்தான், பருவ வயதினர்கள் அதீத பாலுறவு ஆர்வத்தில் இருக்கிறார்கள். தவறான வழிகாட்டல், பிறரின் தூண்டுதல், சூழ்நிலையின் தாக்கம் இவற்றால், இயற்கைக்கு மாறான பாலுறவு இன்பத்தில் திளைக்கிறார்கள். அதனால் வாழ்க்கை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பருவ வயது ஆணும், பெண்ணும் விலகி விளக்கம் பெறவேண்டும். அதற்காகவே மனவளக்கலை வழியாக, காயகல்ப யோகம் எனும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது இல்லை என்பதே உண்மை. வித்தின் தன்மை மாறமாற, அதன் அளவு குறையக்குறைய ஈர்ப்பு இருந்திடாது. இதற்கு, உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும், வயதும் காரணமாக அமைகிறது. தெளிந்த அறிவோடு வாழப்பழகிக் கொண்டால், பாலுறவு ஈர்ப்பை அளவோடும், முறையோடும் அனுபவித்து, இன்பம் நிறைந்து வாழலாம்.

வாழ்க வளமுடன்.