Why always mislead with Karma? Being with positive is good in life! Correct?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதானே? அப்போது ஏன் கர்மா குறித்து அடிக்கடி சொல்லி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள்?
பதில்:
ஆங்கிலத்தில் Positive x Negative என்பதை ‘மெய்மை x பொய்மை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யாரோ, நேர்மறை x எதிர்மறை என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். இனி அதை மாற்றிடவும் வழியில்லை. இனி உங்கள் கேள்விக்கு வரலாம், வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது நீங்களே அனுபவித்தீர்களா? என்பதையும் சொல்லி விடுங்கள்.
தான் எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு, அதாவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு, அதன்படி வாழ்வதாக இருந்தால், உங்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும், மற்றவர்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம் ஆகிறது. இதில் கிடைப்பது, நடப்பது எல்லாமே ‘இன்னும் வேண்டும்’ என்ற நிலையில்தான் இருக்கும். அதாவது பற்றாக்குறை என்ற அளவில்தான் இருக்கும். எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் இன்னும் வேண்டும் என்ற தேவை அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை. ஏனென்றால் இங்கே முழுமையற்ற நிலைதான் நிகழ்கிறது, கிடைக்கிறது எனலாம்.
ஆனால் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து, மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். அது அவர்களின் வழக்கம். உங்களை பயமுறுத்தி அதன்வழியாக தங்களை நிலைநிறுத்திட முயற்சிக்கிறார்கள். நாம், வேதாத்திரியத்தில், கர்மா என்ற வினைப்பதிவு குறித்து விளக்கம் மட்டுமே தருகிறோம். புரிந்து கொண்டு, உங்களின் எண்ணம், சொல், செயல் வழியாக திருத்தம் பெறுக என்றுதான் வழிகாட்டுகிறோம். ஆனால் வேதாத்திரியமும் பத்தோடு பதினொன்று என்பதாக நீங்கள் நினைத்து ஒதுக்குகிறீர்கள். நல்லது அது உங்கள் உரிமையும், விருப்பமும் ஆகும்.
வாழ்கின்ற மனிதன், தனக்குள்ளாக, ஏற்கனவே வாழ்ந்த அவனின் முன்னோர்களின் வினைப்பதிவுகளை பெற்றிருக்கிறான். அவனின் எண்ணம், சொல், செயலில் அது விளைவாக வருகிறது. அது ஏன் எனக்கு வருகிறது? என்று கேட்கமுடியாது. காரணம், மனிதன் தனியாக உருவாகி, வந்துவிடவில்லை அல்லவா? இதை, இந்த வினைப்பதிவுகளை மிகச்சாதாரணமாக, நேர்மறை எண்ணம் கொண்ட வாழ்வால் மாற்றிவிட, தீர்த்துவிட முடியாது என்பதே உண்மை. முதலில் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்தான உண்மை விளக்கங்களை பெற்றுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்,
வாழ்க வளமுடன்.