Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30 | CJ

Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30

Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனைவி நல வேட்பு நாளின் சிறப்பு என்ன? 


பதில்: 

இதற்கான பதிலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே கூறுகின்றார்.

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய [அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன்.

அதுபோலவே, மனவளக்கலை மன்ற அன்பர்களும், அவர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

மேலும் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வாழ்க்கைத்துணையாக வரும் மனைவி குறித்தும், இந்த நாள் குறித்தும் கவியாக சொல்லுகிறார்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப்

பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து,

பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு

என் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப்

பெண்மை  நல நோக்கில் அன்போடு கருணை

இவை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும்

மாண்புமிக்க எந்தன் மனைவியை

நான் மதிக்கின்றேன்

வாழ்த்தி மகிழ்கின்றேன்.


நீங்கள் மிகச்சிறந்த கணவன் எனில் அல்லது அத்தகைய மதிப்பை பெறுவதற்காகவும் கூட, தன் அன்புமிக்க மனைவியை வாழ்த்தி மகிழவும், தன்னுடை அன்பை, அவள்மீது கொண்ட நட்பை, மதிப்பை வெளிக்காட்டவும், இல்லத்தில் இன்பம் பொங்க, வாழ்நாள் சிறக்கவும் இந்த மனைவி நல வேட்பு நாளை மிகச்சிறந்த வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.