Why I am not interested to yoga meditation practice? How I can change it?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவம் செய்வதற்கான ஆர்வமே இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? எப்படி திருத்திக்கொள்ளலாம்?!
பதில்:
ஆரம்பகாலத்தில், அதாவது வேதாத்திரிய அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்ட காலத்தில் அப்படித்தோன்றுவது இயல்புதான். பதினைந்து நாட்களில் நாம் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள் உடனடியாக நம்மை மாற்றிவிடும் என்று எப்படி நம்பமுடியும்? நாமெல்லாம் எவ்வளவு பெரிய கில்லாடிகள். அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வோமா? நம்மை அசைக்க முடியாது அல்லவா?
உண்மை என்ன என்றால், நாம் இதுநாள் வரை வாழ்ந்துவந்த நாட்களில், யோகத்திற்கு இடம் அளிக்கவே இல்லை. பக்தியோடும், பக்தி இல்லாமலும் சாமி கும்பிட்டு வந்தோமே தவிர அதன் உண்மை அறிய முயற்சிக்கவில்லை. கோவில், குளமென்று சுற்றி, மலை ஏறி இறங்கினோமே தவிர அதிலும் உண்மை என்ன என்று அறியவில்லை. ஆனால் தொடர்ந்து பலகாலமாக அதை செய்துவந்தோம். அப்படியான பழக்கம் உடனடியாக நம்மைவிட்டு போய்விடுமா? அது கொஞ்சம் கொஞ்சமாகத்தானே விலகும். இதற்கிடையில், யாரோ ஒரு சிலருக்கு, வேதாத்திரியத்தையே விட்டுவிடலாமே என்று கூட தோன்றிவிடும். அப்படியும் சிலர் விட்டுவிட்டு வேறெதோ, வாசி யோகம், சித்தர் யோகம் என்று பயில போய்விட்டார்கள். சரி அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதுதானே?! நாம் என்ன செய்யமுடியும்?
இப்போது உங்கள் பிரச்சனையும் அதுதான். ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, வழக்கப் பழக்கங்களின் தாக்கம் இன்னமும் உங்களை விட்டு விலகிவிடவில்லை. அதனால், எதற்கடா, இந்த தவமும் யோகமும்?! என்று உங்களை, உங்கள் மனமே குழப்புகிறது.
இதற்கு சரியான வழி என்ன தெரியுமா? உங்களை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். யாரோ சொல்லித்தான் இந்த யோகமும் தவமும் கற்றேனா? இல்லையென்றால் எனக்கே ஆர்வம் வந்து கற்றுக்கொண்டேனா? இதற்கு தகுந்த நேரம், இடம், சூழ்நிலை இருக்கிறதா? இதனால் என்னுடைய வழக்கமான வேலை பாதிப்படைகிறதா? யாருக்காவது தொந்தரவாக இருக்கிறதா? இதனால் என்னுடைய நட்பு வட்டம் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா? என் வீட்டில் எதிர்க்கிறார்களா? ஏற்கிறார்களா? என் வாழ்க்கத்துணைக்கு பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? இதை செய்யும் பொழுது வேறுவேலை தடங்கல் ஆகிறதா? அடுத்து முக்கியமான வேலை இருக்கிறதா? வீம்பாக இதை செய்கிறேனா? எதிர்பார்ப்போடு செய்கிறேனா? என்ற இந்த கேள்விக்கெல்லாம் பதில் என்ன என்று கண்டுபிடித்து, ஒரு வெள்ளைத்தாளில் பதிலை எழுதிவைத்துக்கொண்டு ஆராய்ந்து சிந்தனை செய்யுங்கள்.
அந்த பதிலின் வழியாக, உங்கள் நிலை உங்களுக்கே புரியவரும், அதன்படி நீங்கள் வேதாத்திரிய யோகத்தை தொடரலாம். உங்கள் ஆர்வமும் கூடிவரும் என்பது உண்மை. அதன்வழியே நன்மை விளையும்.
வாழ்க வளமுடன்.