Why we need to worship ancestors and is it a nonsense? | CJ

Why we need to worship ancestors and is it a nonsense?

Why we need to worship ancestors and is it a nonsense?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

Rameshwaram, Tamilnadu, India / image by Dinamalar


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முன்னோர்களை நினைப்பதும், அவர்களை  வணங்குவதும், வேண்டிக்கொள்வதும், இறந்துபோன அவர்கள் நற்கதி அடையவும் வேண்டிக்கொள்வது அவசியம் தானா? நவீன அறிவியல் உலகில் வாழும் நமக்கு, அது ஒரு முட்டாள்தனம் இல்லையா?


பதில்:

மனித வாழ்வு குறித்து, எந்த சிந்தனையும் அக்கறையும், ஆராய்ச்சியும் இல்லாத நிலையில் வாழக்கூடிய மனிதனுக்கு தோன்றக்கூடிய கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மனிதன், இயற்கையின் முழுமையாக, பரிணாமத்தின் வழியாக வந்தவன். திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரோ தீடீரென்று உருவாக்கி உலவ விடவும் இல்லை. ஏதுமற்ற ஒன்றாக இருந்து, கருவாகி, பெண்ணுக்குள், கருப்பையில் உருவாகி, வளர்ந்து, முழுமைபெற்று, அவள் பிரசவித்து, வளர்த்து ஆளாக்கி, மூன்று வயதிற்கு பிறகுதான், தான் யார்? என்ற நிலைக்கே ஒரு குழந்தை நிலைத்து வருகிறது. அதன்பிறகு, நான் என்ற தன்முனைப்பில் ஊறித்திழைக்கிறது.

அந்த குழந்தைக்கு, இதற்கு முன் எங்கிந்தோம் என்று நினைவில் இல்லை. அக்குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்து, வயோதிகமடைந்து இறந்தும் போகிறது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதை பிறருக்கு சொல்லவும் வழியில்லை. வாழும் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் தெரிந்து கொள்வதில்லை. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறக்கிறோம் என்று மூன்றே நிலைபாடுகளில் தன் வாழ்வை சுருக்கிக்கொள்கிறோம். உண்மைதானே?

ஆனால், உண்மை அப்படியில்லையே! மனிதன் ‘நான் யார்?’ என்று கேட்டு விடையறியும் வரை அவனுக்கு/ அவளுக்கு பிறவிப்பயணம் தொடரும். தன்னையறிதலும், அதன் வழியாக தனக்கு மூலமான இறையாற்றலை உணர்வதும் கடமையாகிவிடுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானம் இதை ஏற்பதில்லை.

உண்மையாக, நவீன விஞ்ஞானம், தன்னையறிந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாக்கித்தந்த பாதைக்கு எதிர் திசையில் அழைத்துச்செல்கிறது என்று சொல்லலாமா என்றால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் உண்மை நோக்கித்தான் செல்கிறது என்பது உண்மை, அந்த உண்மை எது என்பதை, தெரிந்துகொள்ளும் அதற்கு நிறைய இழப்பும், காலமும் ஆகலாம். அதுவரை இப்படியான கேள்விகள் வரும்.

நம் முன்னோர்கள் இன்றி நாம் இல்லை. இறந்துபோனவர்கள் குறித்த அக்கறையும், கவலையும் நமக்கு இல்லை எனினும், அவர்களின் நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் என்பது உண்மைதானே? அதுபோல அவர்களின் இனமறியாத ஏதோ நம்மிடம் தங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே? அதை ‘கர்மா என்ற வினைப்பதிவு’ என்று மனிதனின் வாழ்வை, முழுமையை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்ட ஞானிகள் சொல்லுகிறார்கள். அதை தீர்க்கவும், போக்கிடவும் நமக்கு வாய்ப்பு உள்ளது. நாம் அதை தீர்க்காவிட்டால், நம் வழியாக, நம்முடைய குழந்தைக்கும் அது கடத்தப்படும் என்பது இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

அதனால்தான், முன்னோர்களை நினைப்பதும், அவர்களை வணங்குவதும், அவர்கள் நற்கதி அடைய வேண்டுவதும் தேவை என்ற கருத்தியல் உருவானது. ஒருவகையில் யோகத்தில் இணைய ஆர்வமில்லாதவர்களுக்கு உதவும் என்பதே உண்மை. எனினும் இது முட்டாள்தனம் என்று நினைத்தால், அது அவரவர் விருப்பமே. ஏனென்றால் வாழும் வாழ்க்கை என்பது அவரவர் உரிமை.

வாழ்க வளமுடன்.