Family lifestyle is obstructs to the yoga?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?
பதில்:
இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?
யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.
ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.
தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.
வாழ்க வளமுடன்.