After does good, had more problems, so Karma is fake?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?
பதில்:
உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும்.
முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி?
அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.
எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.
வாழ்க வளமுடன்.