Can we make changes if we feel some problems on the simplified exercise?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியில் சில பிரச்சனைகள் எழுந்தால், நமக்கு நாமே சில மாற்றங்களை செய்துகொள்ளலாமா?
பதில்:
எளியமுறை உடற்பயிற்சி, ஏதோ உடனடியாக, இப்படித்தான் என்ற முடிவில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை வழியாக யோகபயிற்சிகளை தரும் முன்பாகவே, எளியமுறை உடற்பயிற்சி என்பதை படிப்படியாக அமைத்துதந்தார். கிட்டதட்ட 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியும், செய்துபார்த்த விளைவுகளின் திருத்தங்களையும் கொண்டது ஆகும்.
மேலும், ஒவ்வொரு உலக நாடுகள் பயணத்தின் பொழுதும், அங்குள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ப, தன் உடற்பயிற்சியால் எழுகின்ற மாற்றங்களையும் குறிப்பெடுத்து, உலகின் எல்லா கால சூழலுக்கும் எற்றவகையில், பாடத்திட்டமாக மாற்றி அமைத்துக்கொண்டார். ஆண்களின் உடலுக்கு ஏற்றவாறும், பெண்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாரும் பொருந்தமான, திருத்தங்களையும் அமைத்திருக்கிறார், முக்கியமாக அஷ்டாங்க யோகத்தின் மூன்று, நான்கு நிலைகளான, ஆசனம், பிராணாயாமம் என்பதையும் எளிமையாக்கி, தன் பயிற்சிகளில் இணைத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
தான் வாழும்வரை, அவ்வப்பொழுது மாற்றங்களை கேட்டு குறித்து அதற்குரிய, திருத்தங்களை சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை. மேலும் பல்வேறு சிறந்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான், முழுமையாக்கினார். எனவே, உங்களுக்கு, எளியமுறை உடற்பயிற்சியில் என்ன கற்றுத்தரப்படுகிறதோ அதை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கையேடு நூலில் என்ன விளக்கப்பட்டுள்ளதோ அதையும் படித்து அறியுங்கள். தினமும் தொடர்ந்து செய்துவாருங்கள்.
எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுது, பிரச்சனை எழுகிறது என்றால், அதன்காரணம், இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாததாலும், புதிதாக ஒன்றை கற்கும் பொழுது உடலும் மனமும் தரும் சோர்வும், ஒதுக்கிவிடும் நிலையுமே தவிர வேறொன்றும் இல்லை. அதனால், நீங்கள் உங்களை ஆர்வமாக வைத்துக்கொண்டு, உற்சாகமாக, செய்து பழகி வாருங்கள். நாளடைவில் உடலும் மனமும் ஒத்த தன்மைக்கு மாறிவிடும் என்பதால், எந்தபிரச்சனையும் உங்களுக்கு உருவாகாது. ஒரே ஒரு பிரச்சனை எழலாம் எப்படி என்றால், இன்றைக்கு எளியமுறை உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேனே? என்ற வருத்தம்தான் அது.
வாழ்க வளமுடன்.